பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறையில் தொடர்பு தலைமறைவாக இருந்த மாநகராட்சி முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் கைது மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் தலைமறைவாக இருந்த மாநகராட்சி முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வன்முறை வெடித்திருந்தது. இதில், புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அகண்ட சீனிவாசமூர்த்திக்கு சொந்தமான வீடு மற்றும் டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு தீவைக்கப்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி இருந்தனர். இந்த வன்முறை குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையங்களில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
வன்முறை தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பிரமுகர்கள், மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் உள்பட 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அகண்ட சீனிவாசமூர்த்தியுடன் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகள் காரணமாக பெங்களூரு மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மேயர் சம்பத்ராஜ், முன்னாள் கவுன்சிலர் ஜாகீர் ஆகியோரின் தூண்டுதலின்பேரில் வன்முறை வெடித்ததாகவும், எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டு இருந்ததாகவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த மாநகராட்சி முன்னாள் மேயர் சம்பத்ராஜ், கடந்த மாதம் (நவம்பர்) மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பத்ராஜின் நெருங்கிய நண்பரும், முன்னாள் கவுன்சிலருமான ஜாகீர் தலைமறைவாக இருந்து வந்தார். டி.ஜே.ஹள்ளி வன்முறை தொடர்பாக ஜாகீரிடம் ஏற்கனவே ஒருமுறை போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருந்தனர். 2-வது முறையாக விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தார்கள்.
ஆனால் அவர், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். முதலில் உடல் நலக்குறைவு காரணமாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த ஜாகீர், பின்னர் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஜாகீரை தேடிவந்தனர்.
அதே நேரத்தில் ஜாகீரின் குடும்பத்தினரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் தங்களுக்கு ஜாகீர் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை என போலீசாரிடம் கூறி விட்டனர். இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஜாகீரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வந்தனர். குறிப்பாக சம்பத்ராஜ் கைதான பின்பு ஜாகீரை கைது செய்வதில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டினார்கள். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜாகீரை, பெங்களூருவில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்துள்ளனர்.
அவரிடம், சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு தீவைத்தது ஏன்?, டி.ஜே.ஹள்ளி வன்முறையில் உள்ள தொடர்பு என்ன?, விசாரணைக்கு ஆஜராகும்படி 2-வது முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தலைமறைவானது ஏன்?, என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர். கைதான ஜாகீரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டி.ஜே.ஹள்ளி வன்முறையில் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story