குண்டர் தடுப்பு சட்டத்தில் பிரபல ரவுடி கைது


குண்டர் தடுப்பு சட்டத்தில் பிரபல ரவுடி கைது
x
தினத்தந்தி 4 Dec 2020 6:30 AM IST (Updated: 4 Dec 2020 6:30 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவாவை அழைத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடு பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து வருகிறது.

உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவா என்கிற குட்டிசிவா (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது சாணிக்குமார் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், எனவே அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உருளையன்பேட்டை போலீசார் முடிவு செய்து இதற்கான கோப்பை தயார் செய்தனர். அதனை கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மூலமாக மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் குட்டி சிவாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பூர்வா கார்க் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து உருளையன்பேட்டை போலீசார் பிரபல ரவுடி குட்டி சிவாவை வலைவீசி தேடி வந்தனர். அவர் நேற்று திடீர் நகர் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று குட்டி சிவாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story