புது கல்பாக்கத்தில் கடல் அரிப்பால் இறால் வளர்ப்பு கட்டிடம் இடிந்தது
புதுகல்பாக்கத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் 100 மீட்டர் தூரத்துக்கு முன்னோக்கி வந்ததால் கடல் அரிப்பு ஏற்பட்டு இறால் குஞ்சு வளர்ப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
1,000 மீனவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த புதுகல்பாக்கம் மீனவர் குடியிருப்பு பகுதியில் 1000 மீனவர்கள் வசித்து வருகின்றனர். வடகிழக்கு பகுதியில் தற்போது தோன்றி உள்ள புரெவி புயலால் நேற்று அதிகாலை 3 மணி முதல் புது கல்பாக்கம் மீனவர் பகுதியில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் 150 மீட்டர் தூரத்திற்கு கடல் முன்னோக்கி வந்ததால் ராட்சத அலை தாக்கியதால் அந்த பகுதியில் கடல் ஓரத்தில் இருந்த இறால் குஞ்சு வளர்ப்பு கட்டிடத்தின் பாதியளவு கட்டிடம் கடல் அரிப்பால் இடிந்து விழுந்து தரை மட்டமானது. அந்த கட்டிடத்தின் பாதி அளவு கட்டிடம் மணல் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய நிலையில் மீதி கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மீனவர்கள் இருந்து வருகின்றனர்.
இறால் குஞ்சுகள்
இந்த கட்டிடம் இடிந்து விழுந்தபோது மீன் வளர்க்கும் தொட்டிகளையும் ராட்சத அலை தாக்கியதால் கடல் அரிப்பில் இடிந்து சேதம் அடைந்தது. இதனால் ஏராளமான இறால் குஞ்சுகள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டன. அதேபோல் இந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு வரை கடல் நீர் வந்துவிட்டதால் அந்த குடியிருப்பின் சுற்றுச்சுவர் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் அதன் அடிப்பகுதி மணல் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது.
அதேபோல் கடல் அரிப்பால் மீனவர்கள் தங்கள் படகு, வலை, என்ஜின் போன்ற மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்க போதிய இடவசதி இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் குடியிருப்புகளில் கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளதால் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக கற்கள் கொட்டியும், தூண்டில் வளைவு அமைத்தும் தங்கள் பகுதியை பாதுகாத்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கடல் அரிப்பு குறித்து தகவல் அறிந்ததும் புது கல்பாக்கம் மீனவர் பகுதிக்கு நேரில் சென்று கடல் அரிப்பினால் விழுந்த கட்டிடம், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து அந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து ஆவன செய்வதாக மீனவா்களிடம் உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story