முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் இப்போதைக்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கானது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் நமக்கானது மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கானது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
பெரியாறு குடிநீர் திட்டம்
மதுரை தமுக்கம் மைதான நுழைவுவாயிலில் முல்லை பெரியாறு அணை போல பிரமாண்ட வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டு உள்ளது. அதனை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். அப்போது பலத்த மழை பெய்தது. இருப்பினும் அமைச்சர் செல்லூர் ராஜூ குடையினை பிடித்தவாறே ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்காகவும், 50 ஆண்டு காலத்திற்கு மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்தவும் ரூ.1,296 கோடி மதிப்பிலான முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கலெக்டர் அலுவலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி உள்பட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த அடிக்கல் நாட்டு விழா மதுரை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்.
பறக்கும் மேம்பாலம்
மதுரை மாநகருக்காக முதல்-அமைச்சர் ஏராளமான திட்டங்களை தந்து இருக்கிறார். கோரிப்பாளையத்தில் உள்ள பறக்கும் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு முடிந்தவுடன், உடனடியாக டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும். மதுரை மாவட்ட மக்கள் விசுவாசமிக்கவர்கள். நன்றியுள்ளவர்கள். அதனை நிரூபிக்கும் வகையில் முதல்-அமைச்சருக்கு இங்கு வரவேற்பு அளிக்கப்படும்.
சரித்திர காலத்தில் இருந்து சொல்வது நம்முடைய மதுரைக்காரர்களின் குணம் என்பது ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் கூட அவருக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
வரவேற்பு
இந்த குடிநீர் திட்டம் என்பது நமக்கு மட்டுமல்ல, நமது எதிர்கால சந்ததியினருக்குமான திட்டம். தமுக்கம் மைதான நுழைவுவாயிலில் முல்லை பெரியாறு அணை போல பிரமாண்ட வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டு உள்ளது. அதனை சினிமா ஆர்ட் இயக்குனர்கள் வடிவமைத்து கொடுத்து உள்ளனர்.
இந்த திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று வீடுதோறும் சென்று மக்களை வெற்றிலை, பாக்கு, பத்திரிகை வைத்து அழைத்து இருக்கிறோம். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக முதல்-அமைச்சரை வரவேற்க 20 இடங்களில் வரவேற்பு அளிக்கிறோம். முதல்-அமைச்சரின் செயல்பாடுகளால் அவர் மீது குறை சொல்ல முடியாமல் எதிர்க்கட்சிகள் வாயடைத்து போய் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story