தஞ்சையில் கல்லணைக்கால்வாய் கரையில் புதர்கள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தஞ்சையில் கல்லணைக்கால்வாய் கரையில் புதர்கள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 4 Dec 2020 2:48 AM GMT (Updated: 4 Dec 2020 2:48 AM GMT)

தஞ்சையில் கல்லணைக்கால்வாய் கரையில் புதர்கள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்,

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தஞ்சை-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள கல்லணையை வந்தடையும். அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் எனப்படும் புது ஆறு ஆகியவற்றில் திறந்துவிடப்படும்.

மற்ற ஆறுகளை விட கல்லணைக்கால்வாய் வேறுபட்டது. மனித உழைப்புகள் மூலம் உருவாக்கப்பட்டது கல்லணைக்கால்வாய். இந்த கல்லணைக்கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளும் பாசன வசதி பெறுகின்றன.

புதர்கள்

தஞ்சை மாநகரின் மையப்பகுதி வழியாக செல்லும் இந்த கல்லணைக்கால்வாயின் கரைகள் பல இடங்களில் வலுவிழந்து காணப்படுகிறது. தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள கல்லணைக்கால்வாய் பாலம் முதல் சுற்றுலா ஆய்வு மாளிகை எதிரே எம்.கே.மூப்பனார் சாலை பாலம் வரை கல்லணைக்கால்வாய் கரையின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

எம்.கே.மூப்பனார்சாலை பாலத்தில் இருந்து நாகை சாலையில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலம் வரை இருபுறமும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒருபுற கரையின் வழியாக மக்கள் நடந்தோ, வாகனங்களிலோ சென்று வருகின்றனர். ஆனால் மறுகரையில் புதர்கள் மண்டி கிடப்பதுடன், திறந்தவெளி கழிப்பறையாக செயல்பட்டு வருகிறது. பாதிதூரத்திற்கு பிறகு மக்கள் செல்வதற்கு வசதியாக சாலை போடப்பட்டு இருக்கிறது.

அகற்றப்படுமா?

எனவே புதர்களை அகற்றி மக்கள் நடந்து செல்வதற்கு வழிவகை செய்து தர வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகும். மேலும் இந்த இடத்தில் இரவு நேரங்களில் பலர், டாஸ்மாக் கடைகளில் இருந்து மது வாங்கி வந்து குடிக்கின்றனர். மேலும் இங்கு குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. மேலும் இங்கு சமூக விரோத செயல்களும் அதிக அளவில் நடைபெறுகிறது.

இங்கு புதர்கள் மண்டிக்கிடப்பதால் இதில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் செல்வதால் மக்கள் ஒருவித அச்சத்துடனே வசிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கல்லணைக்கால்வாய் கரையில் புதர்களை அகற்றுவதுடன் மது குடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக நடைபாதை அமைத்து, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story