டெல்டாவில், 2 நாட்களாக இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


டெல்டாவில், 2 நாட்களாக இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 4 Dec 2020 8:35 AM IST (Updated: 4 Dec 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

டெல்டாவில், 2 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இதன் காரணமாக சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமலும், வாகன போக்குவரத்து இல்லாமலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

தஞ்சாவூர்,

தமிழகத்தை நெருங்கிய ‘புரெவி’ புயல் பாம்பன்-கன்னியாகுமரி இடையே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை மழை பெய்ய தொடங்கியது. அன்று பகல் முழுவதும் விட்டு, விட்டு மழை கொட்டியது. இரவிலும் இந்த மழை இடைவிடாது கொட்டி தீர்த்தது.

நேற்று 2-வது நாளாக இந்த மழை நீடித்தது. காலை முதல் இரவு வரையில் அவ்வப்போது விட்டு, விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையின் காரணமாக சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. தொடர்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழையுடன் காற்றும் வீசியதால் ஆங்காங்கே சாலையோரங்களில் இருந்த பழமையான மரங்கள் சாய்ந்தன. மழை மற்றும் காற்றால் கடும் குளிர் நிலவியது.

கடல் சீற்றம்

நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், தரங்கம்பாடி, வேதாரண்யம், கொள்ளிடம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. கடற்கரையோரங்களில் உள்ள கருங்கல் தடுப்பு சுவரை தாண்டி சுமார் 5 அடிக்கு மேலாக கடல் அலைகள் எழுந்தன.

இதேபோல் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் எப்போதும் அமைதியாக காணப்படும் கடல் நேற்று கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. இதன் காரணமாக கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

வெறிச்சோடிய சாலைகள்; வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

‘நிவர்’ புயல் காரணமாக அரசின் அறிவிப்புக்கிணங்க மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள், ‘புரெவி’ புயல் எச்சரிக்கை காரணமாகவும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. புயல் எச்சரிக்கை காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை துறைமுக பகுதிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 2 நாட்களாக இடைவிடாது கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றியும், வாகன போக்குவரத்து இல்லாமலும் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக டெல்டா பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மூழ்கின

‘புரெவி’ புயல் காரணமாக டெல்டா பகுதியில் வெளுத்து வாங்கிய மழையால் டெல்டாவில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. இந்த மழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. வயல் பகுதிகள் அனைத்தும் குளம்போன்று வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Next Story