வெம்பக்கோட்டை அருகே புதிய கால்நடை கிளை மருத்துவமனை
வெம்பக்கோட்டை அருகே புதிய கால்நடை கிளை மருத்துவமனையை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
புதிய கட்டிடம்
வெம்பக்கோட்டை ஒன்றியம், துரைச்சாமிபுரம் கிராமத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை கிளை மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகின்றனர். விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்குதல் உள்ளிட்ட இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார்.
சிறப்பு முகாம்கள்
கால்நடைகளை சிறந்த முறையில் பராமரிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்போரின் கோரிக்கையை ஏற்று கால்நடைகளின் எண்ணிக்கையை பொறுத்து புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை கால்நடை வளர்க்கும் பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சப்-கலெக்டர் தினேஷ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அருணாசல கனி, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார் ராமானுஜம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிச்சியார்பட்டி மாரியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story