இறந்தவர் உடலை மார்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம்; பாலம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை
கமண்டலநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இறந்தவரின் உடலை மார்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சியில் மல்லிகாபுரம், கமண்டலாபுரம் கிராமங்கள் கமண்டல நதி ஆற்றின் அருகே உள்ளது. இந்த இரு கிராமங்களிலும் சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த இரு கிராமங்களுக்கும் பொதுவாக கமண்டல நதி ஆற்றின் வடக்கு கரையில் மயானம் உள்ளது. எனவே இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஆற்றை கடந்து செல்லவேண்டும்.
ஆற்றில் தண்ணீர் இல்லாத போது இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதில் சிரமம் இருக்காது. ஆனால் தற்போது மழைக்காலம் என்பதால் கமண்டல நதியில், செண்பகத்தோப்பு அணையின் உபரிநீர் அளவுக்கு அதிகமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
மார்பளவு தண்ணீரில் தூக்கிச்செல்லும் அவலம்
நேற்றுமுன்தினம் கமண்டலாபுரம் கிராமத்தில் சேட்டு என்ற முதியவர் இறந்துவிட்டார். அவரின் உடலை, அவரது உறவினர்கள் கமண்டல நதி ஆற்றில் மார்பளவு தண்ணீரில் தூக்கி சென்று மறுகரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். ஆற்றின் குறுக்கே தரை மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மல்லிகாபுரம் கிராமத்தில் ஆற்றின் தென்கரையில் புதியதாக ஒதுக்கப்பட்ட சுடுகாட்டில் காரிய மேடை, எரிமேடை அமைக்க கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது பாதியில் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, மயானத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story