திருவெண்ணெய்நல்லூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்


திருவெண்ணெய்நல்லூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2020 2:30 PM IST (Updated: 4 Dec 2020 2:15 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தெருவில் சாலை வசதி செய்து கொடுக்கப்படாததால் பல ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக வயல்வெளி போன்று மாறிவிடுகிறது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சேற்றில் நடந்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. மேலும் அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரினால் சுகாதார சீர்கேடாக உள்ளதால் பலவித தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் சாலை வசதி செய்து தரப்படவில்லை.

இந்நிலையில் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று அப்பகுதியில் திரண்டு அங்குள்ள சேறும், சகதியுமான சாலையில் நாற்றுகளை நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இங்கு சாலை வசதி செய்து தரக்கோரியும், கழிவுநீர் தேங்காமல் இருக்க வடிகால் வாய்க்கால் வசதி செய்து தரக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசாரும் மற்றும் ஊராட்சி செயலாளர் மூவேந்தன் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை வசதி செய்து தர விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story