தியாகதுருகம் அருகே பரபரப்பு: கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்துசேதம் - டிரைவர் உள்பட 2 பேர் கைது
தியாகதுருகம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்து சேதப்படுத்திய பொக்லைன் எந்திர உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டாச்சிமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆலாங்காட்டுவளசு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி மஞ்சுளாதேவி(வயது 39). இவர் தியாகதுருகம் அருகே உள்ள சூ.பள்ளிப்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் மஞ்சுளாதேவி நேற்று அலுவலகத்தில் இருந்தபோது சூ.பள்ளிப்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம்(41) என்பவர் வேறு நபரின் சிட்டாவை கொடுத்து அடங்கல் கேட்டதாகவும், அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சிட்டாவில் பெயர் உள்ள நபரை வரச் சொல்லுங்கள் தருகிறேன் என்று மஞ்சுளாதேவி கூறியதாக தெரிகிறது. இதனால் வேலாயுதம் ஆத்திரத்துடன் அலுவலகத்தை விட்டு வெளியே சென்றார்.
பின்னர் ஒரு விசாரணைக்காக வெளியே புறப்பட்டு சென்ற மஞ்சுளாதேவி மீண்டும் அலுவலகத்துக்கு திரும்பி வந்தார். அப்போது அலுவலகத்தின் ஒரு பகுதி இடித்து சேதப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அடங்கல் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வேலாயுதம் பொக்லைன் எந்திரத்தை கொண்டு வந்து அலுவலகத்தை இடித்து சேதப்படுத்தியது தெரியவந்தது. உடனே மஞ்சுளாதேவி இது குறித்து தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் வேலாயுதம், பொக்லைன் எந்திர ஓட்டுனர் புது பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்த சாமுண்டி மகன் இருசன்(30), உரிமையாளர் காந்தி(55) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து வேலாயுதம், இருசன் ஆகியோரை கைது செய்தனர். பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல்செய்தனர். இதை அறிந்து கொண்ட காந்தி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். வேறுநபரின் சிட்டாவுக்கு கிராமநிர்வாக அலுவலர் அடங்கல் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்து கிராம நிர்வாக அலுவலகத்தை பொக்லைன் எந்திரத்தை வைத்து இடித்து சேதப்படுத்திய சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story