சிசு கொலையில் இருந்து 163 குழந்தைகள் மீட்பு - கலெக்டர் தகவல்
சிசு கொலையில் இருந்து 163 குழந்தைகள் மீட்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
புவனகிரி,
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்‘ திட்டத்தில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும் கருத்தரங்கில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேசியதாவது:-
பெண் குழந்தைகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளுக்கு நேரிடும் பிரச்சினைகளை தடுக்கவும், பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்யவும், சமுதாயத்தில் அவர்களுக்கு சம உரிமையை அளிக்கவும் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளை பள்ளியில் இருந்து இடை நிறுத்தம் செய்யக்கூடாது. தொடர்ந்து கல்வி பயில செய்ய வேண்டும்.
பெண் சிசு கொலை வழக்கத்தை தடுக்கும் நோக்கில் சிசு கொலையில் இருந்து மீட்கப்பட்டு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் ஆண் குழந்தைகள் 50, பெண் குழந்தைகள் 113 என மொத்தம் 163 குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
குழந்தை திருமணம் தடுப்பு சட்டப்படி கடந்த ஆண்டு 64 குழந்தை திருமணங்களும், இந்த ஆண்டு 73 குழந்தை திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மாதந்தோறும் 7-ந்தேதி பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் வகையில் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு பாராட்டு சான்றிதழ், மரக்கன்று, அம்மா குழந்தைகள் நல பெட்டகம் ஆகியவை வழங்கப்படுகிறது. மாவட்டத் தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த அனைத்து துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஊராட்சி மன்ற தலைவர்கள் இதனை கவனத்தில் கொண்டு உங்கள் ஊராட்சியில் பெண் குழந்தை பிறந்தால் போற்றவும், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகள் பட்டப்படிப்பு படிக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.
கூட்டத்தில் கீரப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், ஒன்றியக்குழு துணை தலைவர் காஷ்மீர் செல்வி, நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், விமலா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாயிராபானு, பாதுகாப்பு அலுவலர் ஆண்டாள், மகளிர் நல அலுவலர் (மகிளா சக்தி கேந்திரா திட்டம்) சண்முகப்பிரியா உள்பட கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story