மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை - குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி


மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை - குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 4 Dec 2020 4:30 PM IST (Updated: 4 Dec 2020 4:29 PM IST)
t-max-icont-min-icon

‘புரெவி’ புயல் காரணமாக மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கடலூர்,

வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் காரணமாக கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், கடலோர மாவட்டங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த புயலால் நேற்று முன்தினம் பகல் முழுவதும் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மேலும் இரவில் சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில், நள்ளிரவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை நேற்று காலை வரை விட்டு விட்டு பெய்தது.

இதற்கிடையே நேற்று காலை சிறிது நேரம் மழை பெய்யவில்லை. பின்னர் 10.30 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அவ்வப்போது பலத்த மழையாகவும், சாரல் மழையாகவும் இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது. மழையினால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.

மேலும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில், வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதை காண முடிந்தது. கடலூர் சண்முகாநகர், மணலி எஸ்டேட், சிவா நகர், கூத்தப்பாக்கம், முத்தையாநகர், பனங்காட்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் பெரிதும் அவதியடைந்தனர். மேலும் கடலூரில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் சுமார் 8 அடி உயரத்துக்கு சீறிப்பாய்ந்து வந்ததை காண முடிந்தது.

இதேபோல் காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, புவனகிரி, அண்ணாமலைநகர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி, தொழுதூர், லக்கூர், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் மற்றும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதில் மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

காட்டுமன்னார்கோவில்- 74, பரங்கிப்பேட்டை-67, கடலூர்-65.6, அண்ணாமலைநகர்-65.2, கொத்தவாச்சேரி-59, புவனகிரி, மே.மாத்தூர் தலா-56, கீழ்செருவாய்-55.3, வானமாதேவி-52, குறிஞ்சிப்பாடி -51, லால்பேட்டை-50.4, சேத்தியாத்தோப்பு-49.6, சிதம்பரம்-46.6, வடக்குத்து-46, பெலாந்துறை-45.8, பண்ருட்டி-45, குப்பநத்தம்-42.8, ஸ்ரீமுஷ்ணம்-41.1, வேப்பூர்-40, விருத்தாசலம்-36, காட்டுமயிலூர்-35, தொழுதூர்-33, லக்கூர்-32. மேலும் மாவட்டம் முழுவதும் சராசரியாக 49.9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மாலை வரை பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையால் தள்ளுவண்டி வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். விருத்தாசலம், குள்ளஞ்சாவடி, மந்தாரக்குப்பம் பகுதியில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. அந்த பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்கால் தோண்டி, மழைநீரை வடிய வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மழையால் கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கீழணையில் இருந்து வினாடிக்கு 90 கன அடி தண்ணீரும், நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக வினாடிக்கு 210 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 45.50 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்பதால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பலர் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல், வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பல இடங்களில் உள்ள மரங்கள் முறிந்தும்,வேரோடும் விழுந்துள்ளன. அதனை அந்தந்த பகுதி நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் வெட்டி அகற்றினர்.

தொடர் மழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. அதேநேரத்தில் தொடர் மழையின் காரணமாக ஏரி, குளங்கள், அணை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story