கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.15 கோடி செல்போன் கொள்ளை வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாறுகிறது - சர்வதேச கொள்ளையர்களுக்கு தொடர்பு இருப்பதால் நடவடிக்கை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.15 கோடி செல்போன் கொள்ளை வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாறுகிறது - சர்வதேச கொள்ளையர்களுக்கு தொடர்பு இருப்பதால் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Dec 2020 5:15 PM IST (Updated: 4 Dec 2020 5:10 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சர்வதேச கொள்ளையர்களுக்கு தொடர்பு இருப்பதால் அந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஓசூர், 

காஞ்சீபுரத்தில் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக்கொண்டு மும்பை நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி சென்று கொண்டிருந்தது. சூளகிரி அருகே மேலுமலையில் அந்த லாரியை வழிமறித்த கும்பல், லாரி டிரைவர், கிளீனரை தாக்கி அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்து சென்றது.

இது தொடர்பாக சூளகிரி போலீசார் விசாரணை நடத்தியதில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 4 தனிப்படையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றனர். அவர்கள் இதுவரையில் 10 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கொள்ளையர்கள் பயன்படுத்திய 4 லாரிகள், 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

கைதான கொள்ளையர்கள், மற்றும் லாரி, கார்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டன. அந்த கொள்ளையர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்களுடன் சேர்த்து மொத்தம் 18 பேருக்கு கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மீதம் உள்ள 8 பேர் 17, 18 வயதுடையவர்கள் என கூறப்படுகிறது. அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அதன் விவரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்த கும்பலுக்கு சர்வதேச அளவில் தொடர்பு உள்ளது. இங்கிருந்து கொள்ளையடித்த செல்போன்களை வங்கதேசத்திற்கு விற்பனை செய்துள்ளனர். ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலான செல்போன்கள் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரைக்கு அங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த செல்போன்களை கொள்ளையடித்து கொடுத்துள்ள இந்த கும்பலுக்கு சர்வதேச கொள்ளையர்கள் கமிஷன் அடிப்படையில் பணம் கொடுத்துள்ளனர். அவ்வாறு ரூ.6 கோடி தொகை ஹவாலா பணமாக வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யா, துபாய், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த சர்வதேச கொள்ளையர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது.

இவர்கள் செல்போன்கள், விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை சர்வதேச அளவில் கடத்த கூடிய கும்பல் ஆவார்கள். தற்போது நடந்துள்ள செல்போன் கொள்ளையிலும் அவர்களுக்கு தொடர்பு உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அந்த கும்பலை பிடிக்க போன இடத்தில் தமிழக போலீசார் மீது தாக்குதல் சம்பவங்களும் நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சர்வதேச அளவில் உள்ள இந்த கொள்ளையர்களை பிடிக்க இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றிட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story