மொரப்பூர் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் தகராறு - 8 பேர் மீது வழக்கு


மொரப்பூர் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் தகராறு - 8 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Dec 2020 5:15 PM IST (Updated: 4 Dec 2020 5:57 PM IST)
t-max-icont-min-icon

மொரப்பூர் அருகே அ.தி.மு.க.-அ.ம.மு.க. வினர் இடையே சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக தகராறில் ஈடுபட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள தம்பிசெட்டிப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுவர் ஒன்றில் அ.ம.மு.க. நிர்வாகிகள் விளம்பரம் எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது தம்பிசெட்டிப்பட்டி பகுதி அ.தி.மு.க. கிளை செயலாளர் ஆறுமுகம் (வயது 60) என்பவர் இந்த இடத்தை நாங்கள் முன்கூட்டியே விளம்பரம் எழுதுவதற்கு அனுமதி பெற்று உள்ளோம் என்றும், இந்த இடத்தில் விளம்பரம் எழுத கூடாதென்றும் கூறியுள்ளார்.அப்போது அ.ம.மு.க. நிர்வாகிகளுக்கும், ஆறுமுகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அ.தி.மு.க. கிளை செயலாளர் ஆறுமுகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஆறுமுகம் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆறுமுகத்தை தாக்கியதாக அ.ம.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் மற்றும் நிர்வாகிகள் தென்னரசு, சிற்றரசு, கனகராஜ், ஏகாவணன், செல்வம், நரசிம்மன் உள்ளிட்ட 8 பேர் மீது மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story