ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாட்டு வண்டியில் நின்று ஆர்ப்பாட்டம்


ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாட்டு வண்டியில் நின்று ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2020 8:15 PM IST (Updated: 4 Dec 2020 8:59 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாட்டு வண்டியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பம்,

கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வீரப்பன்நாயக்கன் குளம் பகுதிக்கு வந்தனர். அவர்கள் குளத்தின் கரையோரத்தில் நெல் கதிரை கையில் வைத்தபடி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க நகர செயலாளர் லெனின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது டெல்லியில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் அப்பகுதியில் உள்ள நெல் வயலில் அவர்கள் இறங்க முயன்றனர். அவர்களை கம்பம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் தடுத்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் போடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து, கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பெருமாள், நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் பெரியகுளம் இந்தியன் வங்கி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story