‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பொதுமக்கள் தங்குவதற்கு 82 நிவாரண முகாம் தயார் - வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்


‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பொதுமக்கள் தங்குவதற்கு 82 நிவாரண முகாம் தயார் - வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
x
தினத்தந்தி 4 Dec 2020 9:30 PM IST (Updated: 4 Dec 2020 9:24 PM IST)
t-max-icont-min-icon

‘புரெவி‘ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்குவதற்கு 82 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்,

வங்க கடலில் உருவான புரெவி புயல் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். புயல் பாதிப்பு கண்காணிப்பு அதிகாரி ரமேஷ்சந்த்மீனா, கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். இதையடுத்து அமைச்சர் பேசியதாவது:-

மாவட்டம் முழுவதும் 84 இடங்கள் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதில் கொடைக் கானல், தாண்டிக்குடி உள்பட 24 இடங்கள் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் ஆகும். எனவே, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 82 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்டவை முகாம்களின் தயாராக உள்ளன.

இதேபோல் புயலில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் தடைபட்டால் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள 20 சிறப்பு குழுக்கள், உரிய உபகரணங்களுடன் உள்ளன. மேலும் மண் சரிவு, சாலை அரிப்பு போன்றவற்றால் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க நெடுஞ்சாலைத்துறையினரை கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

மணல் மூட்டைகள், பொக்லைன் எந்திரம் உள்ளிட்டவை தயாராக உள்ளன. புயலால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், கொடைக்கானல், தாண்டிக் குடி உள்பட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் அதிகாரிகள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் உள்ளனர். உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் 82 நிவாரண முகாம்கள் தயாராக இருக்கின்றன என்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மதன்குமார், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் வினோதன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story