சாந்தினி நாயக்கின் கருச்சிதைவுக்கு சித்து சவதி எம்.எல்.ஏ. கீழே தள்ளிவிட்டதை காரணமாக கூற முடியாது - கணவர் பரபரப்பு பேட்டி


சாந்தினி நாயக்கின் கருச்சிதைவுக்கு சித்து சவதி எம்.எல்.ஏ. கீழே தள்ளிவிட்டதை காரணமாக கூற முடியாது - கணவர் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 5 Dec 2020 4:30 AM IST (Updated: 5 Dec 2020 2:45 AM IST)
t-max-icont-min-icon

பெண் கவுன்சிலர் சாந்தினி நாயக்கின் கருச்சிதைவுக்கு அவரை சித்து சவதி எம்.எல்.ஏ. கீழே தள்ளி விட்டதுதான் காரணம் என கூற முடியாது என்று கவுன்சிலரின் கணவர் கூறினார்.

பெங்களூரு, 

பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி பனகட்டி தாலுகாவில் உள்ள மகாலிங்கபுரா புரசபைக்கு கடந்த மாதம்(நவம்பர்) தலைவர் மற்றும், துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. இதையடுத்து பா.ஜனதா கவுன்சிலரான சாந்தினி நாயக், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து புரசபையை கைப்பற்றிவிட பா.ஜனதாவினருக்கு யோசனை தெரிவித்தார்.

ஆனால் அதற்கு பனகட்டியைச் சேர்ந்த பா.ஜனதா தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக சாந்தினி நாயக் போராட்டம் நடத்தினார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த தெரதால் பா.ஜனதா எம்.எல்.ஏ. சித்து சவதி, சாந்தினி நாயக்கிடம் தகராறு செய்து அவரை பிடித்து கீழே தள்ளினார்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோக்களை பார்த்த பலரும் சித்து சவதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்த நிலையில் மகாலிங்கபுராவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சாந்தினிநாயக், தான் 3 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும், சித்து சவதி எம்.எல்.ஏ. தன்னை பிடித்து கீழே தள்ளியதால் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு குழந்தை வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் தன்னுடைய கருவை கலைத்து விட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டை கூறினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்தும், சித்து சவதி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மகாலிங்கபுராவில் இன்று(சனிக்கிழமை) கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் போராட்டம் நடத்த உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மகாலிங்கபுராவில் உள்ள தனது வீட்டில் வைத்து புரசபை கவுன்சிலர் சாந்தினி நாயக்கின் கணவர் நாகேஷ் நாயக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் சமயத்தில் எனது மனைவியை சித்து சவதி எம்.எல்.ஏ. கீழே தள்ளிவிட்டதால் அவரது கர்ப்பம் கலைந்துவிட்டது என்று கூறுவது தவறு. அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

கடந்த 7 வருடங்களில் எனது மனைவி சாந்தினி நாயக்கிற்கு கர்ப்பம் கலைவது இது 3-வது முறையாகும். இது என் குடும்ப பிரச்சினை. இதை பெரிது படுத்த வேண்டாம். எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

இதை இப்போதே நிறுத்திவிடுங்கள். தேர்தல் முடிந்து சில நாட்களுக்கு பிறகு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தபோதுதான் கருச்சிதைவு ஏற்பட்டது தெரியவந்தது. அதனால் தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட தகராறை கருச்சிதைவுக்கு காரணமாக கூற முடியாது.

இந்த பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story