காவிரி டெல்டாவில், கன மழைக்கு கணவன்-மனைவி உள்பட 4 பேர் பலி


கும்பகோணம் அருகே பலியான குப்புசாமி தம்பதி வசித்து வந்த ஓட்டு வீடு இடிந்து தரைமட்டமாக கிடக்கும் காட்சி
x
கும்பகோணம் அருகே பலியான குப்புசாமி தம்பதி வசித்து வந்த ஓட்டு வீடு இடிந்து தரைமட்டமாக கிடக்கும் காட்சி
தினத்தந்தி 5 Dec 2020 4:05 AM IST (Updated: 5 Dec 2020 4:05 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டாவில், கனமழைக்கு வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் கணவன்-மனைவி உள்பட 4 பேர் பலியானார்கள்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

டெல்டாவில் மழைக்கு 4 பேர் பலி
‘புரெவி’ புயல் காரணமாக காவிரி டெல்டாவில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு டெல்டா மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த மழையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி உள்பட 3 பேரும், நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவரும் என 4 பேர் பலியானார்கள்.இதுகுறித்த விவரம் வருமாறு:-

கணவன்-மனைவி
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் எலும்பிச்சங்காபாளையம் சிவஜோதி நகரை சேர்ந்தவர் குப்புசாமி(வயது 70). இவர் தனது மனைவி யசோதாவுடன்(65) வசித்து வந்தார். இவர்கள் வசித்து வந்த வீடு, ஓட்டு வீடு ஆகும். நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அப்போது தூங்கிக்கொண்டு இருந்த கணவன்-மனைவி இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த குப்புசாமி 
மற்றும் யசோதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்தை நேற்று காலை கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகன், கோட்டாட்சியர் விஜயன் உள்பட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

கைத்தறி நெசவு
வீடு இடிந்ததில் பலியான கணவன்-மனைவி இருவரும் கைத்தறி நெசவு தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில வருடங்களாக இந்த தொழில் பெரிதும் நலிவடைந்ததால் இருவரும் சிறு, சிறு வேலைகள் செய்து குடும்பத்தை நடத்தி வந்தனர். குறைந்த வருமானம் கிடைத்ததால் அவர்களால் அதைக்கொண்டு குடும்பம் நடத்த முடிந்ததே தவிர வீட்டை பராமரிக்க முடியவில்லை. இந்த நிலையில் திடீரென வீடு இடிந்து அவர்கள் இறந்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று குப்புசாமி தம்பதியின் உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

மூதாட்டி
தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள வடகால் கீழத்தெருவை சேர்ந்தவர் கோதண்டபாணி என்பவரின் மனைவி சாரதாம்பாள் (81). மூதாட்டியான இவர், நேற்று முன்தினம் இரவு தனது குடிசை வீட்டில் மருமகள் விஜயலட்சுமி, பேரன் சுதன் ஆகியோருடன் தூங்கி கொண்டு இருந்தார். நேற்று அதிகாலை அந்த பகுதியில் பெய்த கனமழையால் குடிசை வீட்டின் மண் சுவர் இடிந்து தூங்கிக் கொண்டு இருந்த மூதாட்டி சாரதாம்பாள் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் தூங்கிக்கொண்டு இருந்த அவருடைய மருமகள் விஜயலட்சுமி மற்றும் பேரன் சுதன் ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மண்சுவர் இடிந்து விழுந்ததில் குடிசை வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் போலீசார், மூதாட்டி சாரதாம்பாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீழமாத்தூர் கிராமம் தேரடி தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் சரத்குமார்(31). விவசாயியான இவர், நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். 

மழையின் காரணமாக அந்த பகுதியில் மேலே சென்ற மின் கம்பியில் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பி தரையில் அறுந்து விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் சரத்குமார் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரத்குமாரின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

காவிரி டெல்டாவில், கனமழைக்கு கணவன்-மனைவி உள்பட 4 பேர் பலியான சம்பவம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story