பாகூர் பகுதியில் தொடர் மழை: வாய்க்கால் கரை உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்தது - 17 வீடுகள் சேதம்


பாகூர் பகுதியில் தொடர் மழை: வாய்க்கால் கரை உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்தது - 17 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 5 Dec 2020 4:49 AM IST (Updated: 5 Dec 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் வடிகால் வாய்க்கால் கரை உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்தது. 17 வீடுகள் மழைக்கு இடிந்து சேதமடைந்தன.

பாகூர், 

புரெவி புயல் காரணமாக பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக விடிய விடிய மழை கொட்டியது. இதன் காரணமாக பிள்ளையார் குப்பம் தனியார் மருத்துவக் கல்லூரி எதிரில் புதுச்சேரி- கடலூர் சாலையை மூழ்கடித்தபடி தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு செல்கின்றன. தாழ்வான கரை உள்ள இடங்களில் தண்ணீர் வெளியேறுவதால், அந்த பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கன்னியக்கோவில் - பாகூர் சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதேபோல் பாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாழை, மரவள்ளி வயல்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளான பாகூர் தாமரைக்குளம், பிள்ளையார்குப்பம், கன்னியக்கோவில், கிருமாம்பாக்கம், மதிகிருஷ்ணாபுரம், பரிக்கல்பட்டு, சோரியாங்குப்பம் உள்ளிட்ட 10 இடங்களிலும், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 2 இடங்களிலும் மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள கொம்மந்தன்மேடு படுகை அணை, சித்தேரி அணை நிரம்பி வழிகின்றன. இந்த தண்ணீர் கடலில் சென்று வீணாக கலக்கிறது. புதுச்சேரியின் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரிக்கரையில் பன்றிகள் பள்ளம் பறித்து வைத்துள்ளன. இதனை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவினர் மண் மூட்டைகளை அடுக்கி சரிசெய்து வருகின்றனர்.

தொடர் மழைக்கு பாகூர், கிருமாம்பாக்கம், பரிக்கல்பட்டு, மடுகரை சுற்றுவட்டார பகுதிகளில் 17 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த தகவலை வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். பாகூர் பகுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை 15.3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Next Story