பவானி ஆற்றில் குடிநீர் எடுக்க எதிர்ப்பு: மேட்டுப்பாளையத்தில் கடையடைப்பு; ஆர்ப்பாட்டம்
பவானி ஆற்றில் தண்ணீர் எடுத்து குடிநீர் திட்டங்களை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையத்தில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. இதில், பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் 3- வது மற்றும் திருப்பூர் 4-வது குடிநீர் திட்டங்களை செயல்படுத்தினால் ஏற்கனவே உள்ள 17 குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும். மேலும் ஆற்று நீர் பாசன விவசாயிகள் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி, சிறுமுகை, காரமடை மற்றும் சுற்று வட்டார கிராம மக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, பில்லூர் 3-வது மற்றும் திருப்பூர் 4-வது குடிநீர் திட்டங்களை மேட்டுப்பாளையம் பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு செயல்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
அதன்படி, நேற்று மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வணிக வளாகம் மற்றும் ஊட்டி மெயின் ரோடு, காரமடை ரோடு, அன்னூர் ரோடு மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகள் மற்றும் அன்னூர் ரோட்டில் உள்ள புதிய காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து மண்டிகளும் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. மேலும் சிறுமுகையில் அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழு சார்பில் காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேட்டுப்பாளையம் பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் டி.டி.அரங்கசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் மஸ்தான், சபீக்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஷா வரவேற்று பேசினார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமார், நகர மன்ற முன்னாள் தலைவர் சதீஷ்குமார், கோவை புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.என்.ராஜேந்திரன், நகர பாரதீய ஜனதா கட்சி தலைவர் உமாசங்கர், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கமணி, வக்கீல் சாந்தமூர்த்தி, டாக்டர் இஸ்மாயில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், திருமூர்த்தி, முகமது ரபி, எஸ்.டி.டி.யு. முகமது அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி குப்புராஜ் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அஷ்ரப் அலி, மனிதநேய மக்கள் கட்சி ஹக்கீம், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா காதர்பாட்சா, எஸ்.டி.பி.ஐ. அப்துல் ஹக்கீம், சமூக ஆர்வலர் ரஹீம், மூர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சி தங்கராஜ், மின்னல் சிராஜ், நுகர்வோர் பாதுகாப்பு மகபுநிஷா, நாம் தமிழர் கட்சி கார்த்திகா, சாந்தி மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
அப்போது, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தாமோதரன் தீர்மானங்களை வாசித்தார். அதில், திருப்பூர் 4-வது குடிநீர் திட்டத்திற்கு பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் எடுக்க வேண்டும். தற்போது குழாய் பதிக்கும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். மேலும் மேட்டுப்பாளையம் எல்லைக்குள் பணிகளை தொடங்கினால் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்துவது, கோவை 3-ம் குடிநீர் திட்டத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒருங்கிணைப்பாளர் எம்.சு.மணி நன்றி கூறினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா ஆகியோர் மேற்பார்வையில் 100- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மேட்டுப்பாளையத்தில் நீதிமன்ற பணிகளை வக்கீல்கள் நேற்று புறக்கணித்தனர்.
Related Tags :
Next Story