கூடலூர் அருகே பரபரப்பு: அரசு நிலத்தில் கட்டிய வீட்டை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கூடலூர் அருகே அரசு நிலத்தில் கட்டிய வீட்டை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் பகுதியை சேர்ந்தவர் மாமச்சன். இவர் தனது வீட்டின் அருகில் மற்றொரு வீடு கட்டி வந்தார். அந்த வீடு அரசு நிலத்தில் கட்டப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். அப்போது வனத்துறைக்கு அல்லது வருவாய்த்துறைக்கு என முடிவு செய்யப்படாத 53-வது பிரிவுக்கு உட்பட்ட அரசு நிலத்தில் வீடு கட்டப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து வீடு கட்டும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த வீட்டை இடிக்கும் பணி நேற்று நடந்தது. இதை அறிந்த ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில், துணைத்தலைவர் ரெஜி மேத்யூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சி.கே.மணி மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்தனர்.
பின்னர் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், மறு உத்தரவு வரும் வரை அந்த வீட்டை மேலும் கட்டும் பணியை மீண்டும் தொடங்கக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஏற்ற கிராம மக்கள், அந்த வீட்டை இடிக்கும் பணியை கைவிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் கூறும்போது, மக்கள் வசிக்கும் நிலங்கள் 53-வது பிரிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த நிலத்தில் வசிக்கும் மக்கள் வீடு கட்டி கொள்ள சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே உயர் அதிகாரிகளிடம் நேரில் விளக்கம் அளிக்கப்படும் என்றனர்.
பின்னர் வருவாய்த்துறையினர் கூறும்போது, 53-வது பிரிவு நிலத்துக்குள் கட்டுமான பணிகள் மேற்கொள்ளக்கூடாது. இதை மீறி வீடு கட்டப்பட்டது. அதனை அகற்ற கேட்டுக்கொண்டும், அதற்கு உரிமையாளர் முன்வரவில்லை. உயர் அதிகாரிகளிடம் கலந்துபேசி அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story