மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
கோவை,
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சூரிய பிரபா (32). இவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஆகும். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஆண்டு வேல்முருகன் தனது குடும்பத்துடன் கோவை வந்து கவுண்டம்பாளையம் என்.எஸ்.ஆர். பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
ஆனால் அவர் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தார். இதனால் வேல்முருகன் தனது 2 குழந்தைகளையும் அங்குள்ள ஒரு ஆசிரமத் தில் சேர்த்து படிக்க வைத்தார். இதற்கிடையே வேல்முருகனுக்கும், அவருடைய மனைவி சூரியபிரபாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10- ந் தேதி கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் வீட்டில் கிடந்த கேபிள் ஒயரால் சூரியபிரபாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இது குறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே கொலை நடந்த 4 நாட்கள் கழித்து மதுரை ஜே.எம். 2-வது கோர்ட்டில் வேல்முருகன் சரணடைந்தார்.
அவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் 18 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், கேபிள் ஒயரால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற வேல்முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் நாகராஜ் வாதாடினார்.
Related Tags :
Next Story