கரூர் மாவட்டத்தில் தொடர் மழை: நச்சலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வெள்ளாடு சாவு


கரூர் மாவட்டத்தில் தொடர் மழை: நச்சலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வெள்ளாடு சாவு
x
தினத்தந்தி 5 Dec 2020 7:00 PM IST (Updated: 5 Dec 2020 6:54 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நச்சலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வெள்ளாடு பரிதாபமாக இறந்தது.

கரூர்,

கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் அதிகாலை முதலே தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. இந்நிலையில் நேற்று காலை 5 மணியளவில் சாரல் மழை பெய்தது. பின்னர் விட்டுவிட்டு அவ்வப்போது தூறல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் சற்று அவதியடைந்தனர். இந்த தூறல் மழையானது கரூர், திருமாநிலையூர், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் நீடித்தது.

கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை இடைவிடாமல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 6 மணியளவில் நங்கவரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் மனைவி கவிதா (வயது 40) என்பவரது குடிசை வீட்டின் மண் சுவர் இடிந்து, கவிதா வீட்டில் வளர்த்த 2 வெள்ளாடுகள் மீது விழுந்துள்ளது. இதில் ஒரு ஆடு பரிதாபமாக இறந்தது. மற்றொரு ஆடு பலத்த காயம் அடைந்தது. மேலும் வீட்டின் சுவர் இடிந்ததில் மின் சாதனம் உள்பட வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் கவிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கப்படுவதாக கூறினர். நேற்று முன்தினம் இதே பகுதியில் மழைக்கு 3 வீடுகள் இடி விழுந்தது குறிப்பிடத்தக்கது.

குளித்தலை நகரம் மற்றும் கிராம பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் மூன்றாவது நாளாக நேற்று காலை முதல் இரவு வரை லேசான மற்றும் மிதமான மழை விட்டு விட்டு பெய்து கொண்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் குடை பிடித்தபடி சாலைகளில் சென்று வந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மழைகோட் அணிந்தபடியே செல்ல வேண்டியிருந்தது. மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தினால் கட்டுமான தொழில்கள் மேற்கொள்ள முடியாமல், அப்பணியை செய்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை விட்டு விட்டு பெய்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் வெளியே சென்றுவர சிரமம் அடைந்தனர்.

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கரூர்-13, அரவக்குறிச்சி-22.6, அணைப்பாளையம்-10, க.பரமத்தி-3.2, குளித்தலை-17.2, தோகைமலை-8.2, கே.ஆர்.புரம்-18.5, மாயனூர்-20, பஞ்சப்பட்டி-24.6, கடவூர்-18, பாலவிடுதி-43.5, மைலம்பட்டி-40.

Next Story