வேலூரில் 2-வது நாளாக தொடர் மழை அதிகபட்சமாக பொன்னையில் 23.4 மில்லி மீட்டர் பதிவு


வேலூரில் 2-வது நாளாக தொடர் மழை அதிகபட்சமாக பொன்னையில் 23.4 மில்லி மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 5 Dec 2020 8:00 PM IST (Updated: 5 Dec 2020 7:52 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் 2-வது நாளாக தொடர் மழை பெய்தது. அதிகபட்சமாக பொன்னையில் 23.4 மில்லி மீட்டர் பதிவானது.

வேலூர்,

தமிழகத்தில் வடமாவட்டங்களில் ‘நிவர்’ புயல் தாக்கத்தால் கனமழை பெய்தது. வேலூர் மாவட்டத்திலும் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பாலாறு, கவுண்டன்ய ஆறு, காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இந்த புயலின் தாக்கம் மறையாத நிலையில் ‘புரெவி’ புயல் உருவெடுத்தது. இந்த புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. வேலூரில் கடந்த 3-ந் தேதி அதிகாலையில் தொடங்கிய மழை தொடர்ந்து நேற்று முன்தினம் முழுவதும் சாரல் மழையாக பெய்தது.

இதேபோல நேற்றும் வேலூர் நகரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 2-வது நாளாக பெய்த தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாநகராட்சி பகுதியில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் பல இடங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக சத்துவாச்சாரி பகுதிகளில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல மிகவும் அவதி அடைந்துள்ளனர். சில இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குடியாத்தம் -9.2, காட்பாடி -9.8, மேலாலத்தூர் -11.2, வேலூர்-16, வேலூர் சர்க்கரை ஆலைப்பகுதி -18, பொன்னை -23.4.

Next Story