டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விழுப்புரம் ரெயில் நிலையத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை - கே.பாலகிருஷ்ணன் உள்பட 86 பேர் கைது
வேளாண் சட்டங்களை உடனே திரும்ப பெறக்கோரி விழுப்புரம் ரெயில் நிலையத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட 86 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
மத்திய அரசு நிறைவேற்றிய 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று காலை விழுப்புரம் ரெயில் நிலையம் முன்பு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், கம்யூனிஸ்டு கட்சிகளின் நிர்வாகிகள் குமார், ராதாகிருஷ்ணன், கலியமூர்த்தி, கோவிந்தராஜ், செண்பகவள்ளி, சுசீலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையிலும் நனைந்தபடி வேளாண் சட்டங்களை உடனே வாபஸ் பெறக்கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட 86 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறுகையில், டெல்லியில் 8 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கொச்சைப்படுத்துகிற வகையில் இந்த வேளாண் சட்டங்கள் சிறப்பான சட்டம் என்று மோடி சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், சேலத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த சட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். மேலும் இந்த சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்துவிட்டு, பாராட்டுகிற வகையிலும் அந்த சட்டம்போல் ஒரு சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
டெல்லியில் போராட்டம் முடிந்தாலும் கூட தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிற சட்டத்தை கிழித்து எறிகிற வரையில் தமிழகத்தில் விவசாயிகளும், அனைத்துக்கட்சியினரும் மிக பிரமாண்டமான போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று நான் எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story