கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை - அதிகபட்சமாக உளுந்தூர்பேட்டையில் 12 செ.மீ. பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. அதிகபட்சமாக உளுந்தூர்பேட்டையில் 12.5 செ.மீ. பதிவானது.
கள்ளக்குறிச்சி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. வங்கக்கடலில் கடந்த 24-ந் தேதி உருவான நிவர் புயல் புதுச்சேரி- மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி பின்னர் அது புயலாக மாறியது. புரெவி என பெயரிடப்பட்ட இந்த புயல் நேற்று அதிகாலை பாம்பன்-கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்றும், அதன் காரணமாக லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்ய தொடங்கிய மழை நேற்று 2-வது நாளாக நீடித்தது. விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. குடியிருப்பு பகுதிகளையும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சில, ஏரி குளங்கள் நிரம்பி வழிந்தோடுவதையும் காணமுடிகிறது. கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை நிரம்பியதை அடுத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து பாசன வாய்க்கால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வடபொன்பரப்பி ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீருடன், மழைநீர் கலந்து சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவித்தனர். மேலும் அருகில் உள்ள கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை மழைநீரில் மூழ்கியதால் வாகனங்களை ஓட்டிச்செல்ல டிரைவர்கள் பரிதவித்தனர்.
மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது. தற்போது முஷ்முகுந்தாதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்க்கவாடி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறி வருகிறது. காங்கேயனூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 65) என்பவர் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்த விழுந்தது.
அதேபோல் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், மாடம்பூண்டி, மணலூர்பேட்டை, திருப்பாலப்பந்தல், எறையூர், தியாகதுருகம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உளுந்தூர்பேட்டையில் 125 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக கச்சிராயபாளையத்தில் 24 மில்லி மீட்டரும் பதிவானது. சராசரியாக 66 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
மணலூர்பேட்டை - 90
எறையூர் - 80
வெங்கூர் - 79
கீழ்பாடி - 79
தியாகதுருகம் - 78
மடம்பூண்டி - 76
திருக்கோவிலூர் - 75
ரிஷிவந்தியம் - 75
மூங்கில்துறைப்பட்டு - 71
களையநல்லூர் - 70
சூலாங்குறிச்சி - 65
கள்ளக்குறிச்சி - 63
திருப்பாலப்பந்தல் - 62
சங்கராபுரம் - 59
கடவானூர் - 56
அரியலூர் - 53
பிள்ளையார்குப்பம் - 45
மூரார்பாளையம் - 26
Related Tags :
Next Story