‘புரெவி’ புயல் எதிரொலி: விழுப்புரத்தில் கொட்டித்தீர்த்த மழை - 3-வது நாளாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்
‘புரெவி’ புயல் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.
விழுப்புரம்,
வங்க கடலில், நிவர் புயலை தொடர்ந்து உருவான புரெவி புயல் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நல்ல மழையை கொடுத்துள்ளது. மழையின் தீவிரம் நேற்றும் ஓய்ந்தபாடில்லை. அவ்வப்போது சில நிமிடங்கள் ஓய்வு கொடுத்துவிட்டு, பின்னர் அடாவடியாக மழை பெய்தது.
குறிப்பாக மாவட்டத்தில் கடலோர கிராமங்களான மரக்காணம், கோட்டக்குப்பம், பொம்மையார்பாளையம், கூனிமேடு, நொச்சிக்குப்பம், ஆரோவில், வானூர், நடுக்குப்பம், அனிச்சங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது.
மழை நின்றாலும் தூரல் நின்றபாடில்லை. இதனால் இடைவிடாது மழை என்ற வகையிலேயே மாவட்டமே தொடர்ந்து மழையில் நனைந்து கொண்டிருந்தது. தொடர்ந்து பெய்யும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. தொடர்ந்து 3-வது நாளாக இடைவிடாது பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். ஏற்கனவே ‘நிவர்’ புயலால் உருவான வெள்ளம் வடிவதற்குள் மீண்டும் வெள்ள நீர் சூழந்து இருப்பது மக்களை மேலும் பாதிப்புக்கு ள்ளாக்கி இருக்கிறது புரெவி புயல்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கி ஏரிபோல் காட்சியளித்தது. இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்லாமல், பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதியில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கிச்சென்றன. தொடர் மழையால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. ஆறுகள், வாய்க்கால்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில், கோலியனூர்- குச்சிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஏரி வாய்க்காலை கடந்து செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த சிறுபாலம் உடைந்து சேதமடைந்ததால் கோலியனூரில் இருந்து குச்சிப்பாளையம் உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல் மழவந்தாங்கல் தரைப்பாலமும் சேதமடைந்துள்ளதால் அப்பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சமாதேவி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள மேட்டுத்தெருவில் வசித்து வரும் சீனிவாசனின் கூரை வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதேபோல் திண்டிவனம் அடுத்த நெய்குப்பி, நாகவரம் ஆகிய கிராமங்களில் தலா 5 கூரைவீடுகள் இடிந்து விழுந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.
திண்டிவனம் விவேகானந்தர் நகர் பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதால் அந்த பகுதி மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த திண்டிவனம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, நகராட்சி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேல்மலையனூர் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மழையின் காரணமாக சிறுதலைப் பூண்டி, முருகன் தாங்கல், வளத்தி, கன்னலம் அன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மணிலா மற்றும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதேபோல் பிரம்மதேசம் பகுதியில் பயிர் செய்திருந்த 500 ஏக்கர் நிலப்பரப்பிலான தர்பூசணி பயிர் மழைநீரில் மூழ்கி உள்ளது. தண்ணீர் தேங்கி நிற்பதால் செய்திகள் அழுகி போய்விடும் மிகவும் கவலை அடைந்துள்ளன. செஞ்சி பகுதியில் கொட்டிய கனமழையால் செஞ்சி நகருக்கு நீராதாரமாக விளங்கும் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள பி ஏரி வடக்கு, தெற்கு பகுதி நிரம்பி வழிகிறது. இதனால் செஞ்சி பி ஏரி வடக்கு பகுதியில் உள்ள நீர் வ.உ.சி. நகர், நேதாஜி தெரு ஆகிய பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டிவனத்தில் 14.3 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் பதிவான மழைஅளவு சென்டி மீட்டரில் வருமாறு:-
வளவனூர் 10.9, கோலியனூர் 10.2, விழுப்புரம், வல்லத்தில் 9.2, முண்டியம்பாக்கம் 9, கெடார், முகையூர் 8.9, வானூர், மரக்காணம் 8.8, செஞ்சி 8.5, சூரப்பட்டு 8.4, கஞ்சனூர் 8.2, நேமூர் 7.9, வளத்தி 7.2, செம்மேடு 6.7, அனந்தபுரம் 5.4, அவலூர்பேட்டை 5.2, திருவெண்ணெய்நல்லூர் 3.3, மணம்பூண்டி 3, அரசூர் 28.
Related Tags :
Next Story