வரும்... ஆனா வராது... வடிவேல் காமெடி பாணியில் குமரியை மிரட்டிய ‘புரெவி’ புயல்


வரும்... ஆனா வராது... வடிவேல் காமெடி பாணியில் குமரியை மிரட்டிய ‘புரெவி’ புயல்
x
தினத்தந்தி 5 Dec 2020 10:15 PM IST (Updated: 5 Dec 2020 10:03 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ‘புரெவி’ புயல் எச்சரிக்கை ‘வரும்... ஆனா வராது...’ என வடிவேல் காமெடி பாணியில் ஆனது.

கன்னியாகுமரி,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவானது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டது. குமரி உள்பட தென்மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கன்னியாகுமரி கடற்கரைக்கு வந்து பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணித்தனர். கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரியில் ஓட்டல் மற்றும் கடைகள் மூடப்பட்டன. கடலில் மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடற்கரை பகுதியில் 24 மணி நேரமும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கட்டுமரம் வள்ளம் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் தங்களது மீன்பிடி படகுகள், வலை உள்ளிட்ட உபகரணங்களை பாதுகாப்பாக மேடான பகுதியில் கொண்டு வைத்து உள்ளனர்.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை இன்றி கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால், கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் கடலில் சீற்றமோ, மழையோ, சூறாவளி காற்றோ இதுவரை இல்லை. மழைமேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமாக மட்டும் காட்சியளிக்கிறது.

இதனால் கடந்த 3 நாட்களாக வெயிலை பார்க்க முடியவில்லை. அதேநேரம் கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஒருபுறம் கடல் குளம் போல் காட்சியளிப்பதும் மறுபுறம் அலையுடன் காட்சியளிப்பதுமாக இருக்கிறது. கடல் உள்வாங்கியும் காணப்படுகிறது.

‘புரேவி’ புயலால் ‘குமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும்... நாளை மிக கனமழை பெய்யும்’ என்ற அறிவிப்பை வானிலை மையம் அறிவித்த வண்ணமாக உள்ளது. ஆனால் இதுவரை குமரியில் ‘புரெவி’ புயலுக்கான எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மழையும் பெய்யவில்லை. இதனால் மழையை எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம்.

‘வரும்... ஆனா வராது...’ என்ற வடிவேல் காமெடி பாணியில் ‘புரெவி’ புயல் எச்சரிக்கை மாறிவிட்டது. இதனால் இந்த புயலை நம்பி தினம் தினம் அச்சத்துடன் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். குமரிக்கு புயல் வருமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்ப்போம்.

Next Story