தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கு பரிந்துரை: முதல்-அமைச்சருக்கு ஜான் பாண்டியன் நன்றி
தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் நன்றி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் பாளையங்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசாணை
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் என்ற தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து அரசாணை வெளியிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதை மனதார வரவேற்கிறோம். 6 பிரிவுகள் அல்ல, 7 பிரிவுகள் என்று நான் தொடர்ந்து முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன். அதை ஏற்றுக்கொண்டு 7 பிரிவுகளை உள்ளடக்கி அரசாணைக்கு பரிந்துரை என்று அறிவித்ததற்கும், எனது தொடர் கோரிக்கை மனுவை ஏற்று நடவடிக்கை
எடுத்ததற்காகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
பட்டியல் இனம்
ஆனால் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றம் குறித்த முதல்-அமைச்சரின் கருத்தில் நாங்கள் மாறுபடுகிறோம். ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர்களும் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள். பட்டியல் இன வெளியேற்றம் மட்டுமே எங்களுக்கு பொருளாதாரம், கல்வியில் முன்னேற்றத்தை தரும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறோம். அந்த கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
மத்திய அரசு தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அரசாணை அறிவிக்கப்படும் வரை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிற கருப்புச்சட்டை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். கருப்புச்சட்டை அறவழி போராட்டத்தின் 400-வது நாள் வருகிற டிசம்பர் 15-ந்தேதி அன்று அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கருப்புச்சட்டை மனிதசங்கிலி அறவழி போராட்டம் நடைபெறுகிறது.
ரஜினி
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் கருத்து கூற முடியும். ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை. அவர் கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவர் கட்சி தொடங்கிய பின்பு அவரை பற்றி கருத்து கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், இணை செயலாளர் துரை பாண்டியன், மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், மகளிர் அணி தலைவி நளினி, மாணவரணி நிர்வாகி முத்து பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story