கண்ணீர் சிந்துவது தேவேகவுடா குடும்பத்தின் கலாசாரம் சித்தராமையா தாக்கு
கண்ணீர் சிந்துவது தேவேகவுடா குடும்பத்தின் கலாசாரம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. பசுமாடுகள் மற்றும் எருமை மாடுகளின் சாணியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அள்ளினார் களா?. அரசியல் நோக்கத்திற்காக அந்த அமைப்பினர் பசுவதை தடை சட்டம் குறித்து பேசுகிறார்கள். சமூகத்தை உடைக்கும் முயற்சியை அந்த அமைப்பு மேற்கொள்கிறது. கூட்டணி ஆட்சி கவிழ காங்கிரஸ் காரணம் என்று குமாரசாமி கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு நான் பதிலளிக்க கூடாது.
பொறுப்பற்ற முறையில் அவர் இவ்வாறு பேசுகிறார். நட்சத்திர ஓட்டலில் இருந்து ஆட்சியை அவர் நடத்தினார். எம்.எல்.ஏ.க்களை அவர் சந்திக்கவில்லை. அவர் எப்போதும் அந்த நட்சத்திர ஓட்டலிலேயே இருந்தார். எம்.எல்.ஏ.க்களுடன் நல்லுறவை பேணி இருந்தால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்திருக்காது. தேவேகவுடா யாரையும் வளர்க்க மாட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வளருவார்கள். கண்ணீர் சிந்துவது தேவேகவுடா குடும்பத்தின் கலாசாரம். வாக்குகளை கவரவும், பிறரை நம்ப வைக்கவும் அவர்கள் கண்ணீர் சிந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
சித்தராமையா முன்கூட்டியே திட்டமிட்டு எனது நற்பெயரை கெடுத்துவிட்டதாக குமாரசாமி என் மீது குற்றம்சாட்டியுள்ளார். அவருக்கு நற்பெயர் இருந்தால் தானே அதை கெடுக்க முடியும். அந்த நற்பெயரே இல்லாதபோது அதை எப்படி கெடுக்க முடியும்?. குமாரசாமி பொய் பேசுவதில் நிபுணர். நேரத்திற்கு ஏற்றார்போல் அவர் பொய் பேசுகிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததாக குமாரசாமி கூறுகிறார். அவரது வீட்டில் இருந்து பணம் எடுத்து வந்து கொடுத்தாரா?. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்ததால் தான் குமாரசாமி முதல்-மந்திரியானார். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story