பஸ்-ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு வரவேற்பு இல்லை போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் கைது


பஸ்-ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு வரவேற்பு இல்லை போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2020 5:14 AM IST (Updated: 6 Dec 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பஸ்-ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பா, மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். இதற்கு கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்தன. கர்நாடக அரசு தனது முடிவை வாபஸ் பெறக்கோரி டிசம்பர் 5-ந் தேதி (நேற்று) கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.

ஆனால் எக்காரணம் கொண்டும் முழு அடைப்புக்கு அனுமதி இல்லை என்றும், சட்டவிரோதமாக போராட்டம் நடத்துகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கைக்கு இடையே கர்நாடகத்தில் திட்டமிட்டப்படி நேற்று கன்னட சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தின. காலை வழக்கம்போல் அரசு பஸ்கள் எந்தவித தடையும் இன்றி இயங்கின. ஆட்டோ-வாடகை கார்களின் சேவையிலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தனியார் வாகனங்களும் சாலையில் எப்போதும் போல் ஓடியபடி இருந்தன.

சிட்டி மார்க்கெட் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் திறக்கப்பட்டிருந்தன. தனியார் நிறுவனங்கள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. அதில் பணியாற்றுகிறவர்களும் பணிக்குவழக்கம்போல சென்றனர். அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு இருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தடையின்றி செயல்பட்டன. பெங்களூரு நகரின் இதய பகுதியான மெஜஸ்டிக்கில் உள்ள முக்கியமான பஸ் நிலையங்களில் அரசு பஸ்களின் வருகையில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. மெஜஸ்டிக் பகுதி எப்போதும் போல் பரபரப்பாகவே காணப்பட்டது.

திரையரங்குகளில் சினிமா காட்சிகள் ஓடின. மெட்ரோ ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் உண்டாகவில்லை. சிட்டி ரெயில் நிலையத்தில் ரெயில்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த நேரத்தில் இருந்தன. அனைத்து ரெயில்களும் இயக்கப்பட்டன. இதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. பெங்களூரு தவிர மைசூரு, உப்பள்ளி-தார்வார், மங்களூரு, சிக்கமகளூரு, துமகூரு, சித்ரதுர்கா உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. பஸ்கள்-ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இடையூறு இன்றி செயல்பட்டன. மொத்தத்தில் கர்நாடகத்தில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்புகள் பெங்களூரு டவுன் ஹால் முன்பு குவிந்தனர். அவர்கள் அங்கிருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடத்த முயன்றனர். அப்போது, போலீசார் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர். டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்ற தலைவர் சா.ரா.கோவிந்த் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

கன்னட அமைப்பினரை கைது செய்து ஏற்றி சென்றபோது பஸ்சில் அந்த அமைப்பினர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உள்ளே இருந்தபடி உடைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதே போல் அனந்தராவ் சர்க்கிள், சிவானந்த சர்க்கிள் உள்ளிட்ட பகுதிகளிலும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர். டவுன் பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனம் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பகுதியில் இரும்பு தடுப்புகளை கொண்டு வேலி போல் போலீசார் ஏற்படுத்தி இருந்தனர்.

டவுன் ஹாலில் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர், சிலர் தங்களின் சட்டையை கழற்றி எறிந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். முதல்-மந்திரி எடியூரப்பாவின் படத்தை செருப்பால் அடித்தனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். இந்த முழு அடைப்பு குறித்து வாட்டாள் நாகராஜ், போலீஸ் பஸ்சில் ஏறுவதற்கு முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கும் முடிவுக்கு எதிராக கன்னட அமைப்புகள் இன்று (நேற்று) முழு அடைப்பு நடத்தின. இதற்கு மாநிலம் முழுவதும் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. ஜனநாயகத்தில் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் எங்களை போராட்டம் நடத்த விடாமல் போலீசார் கைது செய்துள்ளனர். இதை நாங்கள் கண்டிக்கிறோம். கன்னட அமைப்புகள் வருகிற 9-ந் தேதி பெங்களூருவில் ஒன்றுகூடி அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளோம்.

முதல்-மந்திரி எடியூரப்பா பிற மொழிகளின் ஏஜெண்டை போல் செயல்படுகிறார். பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பா.ஜனதாவின் ஏஜெண்டு. எங்களின் முழு அடைப்பை தோற்கடிக்க இந்த அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. கர்நாடக அரசு தனது முடிவை வாபஸ் பெறாவிட்டால் நாங்கள் இன்னும் தீவிரமான முறையில் போராட்டம் நடத்துவோம். சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

Next Story