மராட்டியத்தில் நிலையான அரசை விரும்பினால் காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பதை நிறுத்துங்கள் சரத்பவாருக்கு பெண் மந்திரி எச்சரிக்கை
மராட்டியத்தில் நிலையான அரசை விரும்பினால் காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பதை நிறுத்துங்கள் என்று சரத்பவாருக்கு பெண் மந்திரி யஷோமதி தாக்குர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை,
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா எழுதிய சுயசரிதை நூலில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பற்றி விமர்சித்து இருந்தார். அதில், “ ராகுல்காந்தி பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார். மாணவரை போல் பாடங்களை நன்றாகப் படித்து, ஆசிரியரை ஈர்க்கும் திறமை படைத்தவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட பாடத்தில் ஆழ்ந்த அறிவு பெறக்கூடிய விருப்பமோ அல்லது தகுதியோ இல்லாதவராக இருக்கிறார்“ என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், மற்றொரு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராகுல்காந்தியை பற்றி விமர்சித்தார். மராத்தி பத்திரிகை ஒன்று சரத்பவாரிடம் பேட்டி கண்டபோது, “ராகுல் காந்தியை நாட்டை வழிநடத்தும் தலைவராக இந்த தேசம் ஏற்றுக்கொள்ளுமா?“ என கேட்கப்பட்டது.
அதற்கு சரத்பவார் பதில் அளிக்கையில், “ இது தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன. அவர் இன்னும் பக்குவம் பற்றாக்குறை உள்ளவராக தான் தோன்றுகிறது “ என்று கூறினார்.
இது மராட்டியத்தை ஆளும் கூட்டணி கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காங்கிரசை சேர்ந்த மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியான யஷோமதி தாக்குர் டுவிட்டர் பதிவில் சரத்பவாருக்கு கடும் எதிப்பு தெரிவித்ததோடு, மாநில கூட்டணி அரசுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது.
ஒவ்வொருவரும் கூட்டணியின் அடிப்படை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நான் மாநில காங்கிரசின் செயல் தலைவராக இருப்பதால், மகா விகாஸ் கூட்டணியை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். மராட்டியத்தில் நீங்கள் நிலையான ஆட்சியை விரும்பினால், காங்கிரஸ் தலைமை பற்றி கருத்து தெரிவிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள்.
எங்கள் தலைமை மிகவும் வலுவானது மற்றும் நிலையானது. ஜனநாயகத்தின் வலுவான நம்பிக்கை காரணமாக தான் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு மலர்ந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story