திருச்சி சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதிகள் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் அறுவடை


திருச்சி சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதிகள் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் அறுவடை
x
தினத்தந்தி 6 Dec 2020 6:51 AM IST (Updated: 6 Dec 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதிகள் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என சுமார் 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயுள் தண்டனை பெற்று பல ஆண்டுகளாக சிறையிலுள்ள கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிறை வளாகத்தில் உள்ள தோட்டங்களிலும், தொழில் கூடங்களிலும், சிறை அங்காடிகளிலும் பணி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பணி புரிவதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் குறிப்பிட்ட தொகை சம்பந்தப்பட்ட கைதிகளின் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆண்டு தோறும் சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் காய்கறிகள், நெற்பயிர்கள், கரும்பு போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சின்ன வெங்காயமும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கிலோ ரூ.80-க்கு விற்பனை

அந்தவகையில் இந்த ஆண்டு கைதிகளால் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டது. அதில் சுமார் 500 கிலோ சின்ன வெங்காயம் உற்பத்தி ஆகி உள்ளது. இயற்கை உரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை சிறை அங்காடியில் பொதுமக்களுக்கு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்து வருகிறார்கள். அவற்றை பொதுமக்கள் வாங்கி பயன் அடைய வேண்டும் என சிறைத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். முன்னதாக சின்ன வெங்காயம் அறுவடை நிகழ்ச்சியில் திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. கனகராஜ், சிறை சூப்பிரண்டு சங்கர், சிறை அங்காடி சூப்பிரண்டு திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story