சிவகாசி சிவன் கோவில் அருகே தள்ளுவண்டிகளால் போக்குவரத்து நெரிசல்; போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சிவகாசி சிவன்கோவில் அருகே நிறுத்தி வைக்கப்படும் தள்ளுவண்டிகளால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சரி செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிவன் கோவில்
சிவகாசி சிவன் கோவில் எதிரில் உள்ள இடத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வானங்களை நிறுத்தவும் இந்த இடம் பயன்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சிவன்கோவில் எதிரில் உள்ள காலி இடத்தில் அதிகாலை நேரத்திலேயே தள்ளுவண்டிகள் அதிக அளவில் நிறுத்தி வியா பாரம் செய்ய தொடங்கி விடுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தவும், அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்தவும் போதிய இட வசதி இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்க சிவன் கோவில் அருகில் உள்ள காலி இடங்களில் தள்ளு வண்டிகளை நிறுத்தவும், தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யவும் போலீசார் தடை விதிக்க
வேண்டும். இவர்களுக்கு என பஜார் பகுதியில் தனியாக இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தள்ளுவண்டிகளை நிறுத்துவதால் அந்த தள்ளுவண்டியில் விற்பனையாகும் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளரும் அதே பகுதியில் வாகனத்துடன் நிற்பதால்
அங்கு அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை போலீசார் கண்டு கொள்வதில்லை.
இதனால் அந்த பகுதியில் நிறுத்தப்படும் தள்ளுவண்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தள்ளுவண்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த தயங்குவது
ஏன்? என்று தெரியவில்லை. தேரடியில் இருந்து திருத்தங்கல் நோக்கி செல்லும் பாதையையும் ஒரு வழி பாதையாக போலீசார் அறிவித்து அது நடை முறையில் உள்ளது. இதனால் பெரும்பாலான வாகனங்கள் தற்போது சிவன் கோவில் வழியாக சென்று எண்ணைக் கடை முக்கு வழியாக வந்து பின்னர் அங்கிருந்து முருகன் கோவில் வழியாக திருத்தங்கல் ரோட்டை அடைகிறார்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்த போலீசார் சிவன் கோவில் அருகில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வரும் தள்ளுவண்டிகாரர்களையும், தரையில் அமர்ந்து வியாபாரம் செய்வர்களையும்
கண்டு கொள்வதில்லை.
தவிர்க்க முடியாது
இவர்களுக்கு என அந்த பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி கொடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். சிவன் கோவில் அருகில் உள்ள 2 அடி பாதையில் வாகனங்கள் எதிர், எதிர் திசையில் வருவதால் அந்த பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க போலீசார் அந்த பகுதியை ஒருவழி பாதையாக அறிவிக்க வேண்டும். மேலும் ரத வீதிகளில் தினமும் ஒரு புது கட்டிடத்துக்கு அனுமதி வழங்கும் சிவகாசி நகராட்சி நிர்வாகம் அந்த புதிய கட்டிடத்தில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்க வலியுறுத்துவது இல்லை. கட்டிட வரைப்படத்துக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகள் அந்த வணிக நிறுவனத்தில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை இனி வரும் காலத்தில் கவனித்து அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சிவகாசியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
Related Tags :
Next Story