மருத்துவக்கல்லூரி சாலையில் திறந்த சில மணி நேரத்தில் பெண்கள் திரண்டு வந்ததால் டாஸ்மாக்கை பூட்டிவிட்டு ஊழியர்கள் ஓட்டம்


மருத்துவக்கல்லூரி சாலையில் திறந்த சில மணி நேரத்தில் பெண்கள் திரண்டு வந்ததால் டாஸ்மாக்கை பூட்டிவிட்டு ஊழியர்கள் ஓட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2020 9:14 AM IST (Updated: 6 Dec 2020 9:14 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் திறந்த சில மணிநேரத்தில் பெண்கள் திரண்டு வந்ததால் டாஸ்மாக்கை பூட்டி விட்டு ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், விளையாட்டு அரங்கம், குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில் இந்த சாலையில் மேம்பாலம் அருகே உள்ள காசிமேடு பகுதியில் நேற்று மதியம் டாஸ்மாக்கடை புதிதாக திறக்கப்பட்டது.

டாஸ்மாக் கடை திறந்து விற்பனையும் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து மாலை 4 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டு வந்தனர். டாஸ்மாக்கடையை திறந்து விற்பனை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் இதனை பார்த்தனர்.

பூட்டி விட்டு ஓட்டம்

மேலும் அ.தி.மு.க. வார்டு செயலாளர் தங்கம், தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சதாசிவம் மற்றும் பல்வேறு கட்சியினரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து ஊழியர்கள், மதுபாட்டில்களை அட்டைப்பெட்டிக்குள் எடுத்து வைத்தனர். பின்னர் கடையை பூட்டி விட்டு மதுபாட்டில்களுடன் அங்கிருந்து ஓடி விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் இது போக்குவரத்து நிறைந்த சாலை. இங்கு மதுக்கடை திறந்தால் பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே குடியிருப்பு உள்ள பகுதியில் மதுக்கடைகளை திறக்க கூடாது”என்றனர்.

Next Story