செயின்பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது; 54 பவுன் நகைகள் மீட்பு
ராமநாதபுரம் மாவட்டத்தை கலக்கிய செயின்பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 54 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
செயின் பறிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மற்றும் திருப்புல்லாணி ஆகிய போலீஸ் நிலைய பகுதிகளில் 4 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட வாலாந்தரவையை சேர்ந்த மலைக்கண்ணன் மகன் மாந்தா (என்கிற) மகேந்திரன் (வயது31) , தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரை சேர்ந்த சுப்பையா மகன் காளிராஜ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல, ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலைய பகுதியில் 9 இடங்களில் வீடு புகுந்து திருடியது, செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியை சேர்ந்த விக்ரம் சூர்யா மகன் அறிவுமணி மற்றும் நேருநகரை சேர்ந்த பழனிக்குமார் மகன் ரஞ்சித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 21 பவுன் நகை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, நயினார்கோவில், திருவாடானை, விருதுநகர் மாவட்டம், பரளச்சி, சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூர் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் 6 இடங்களில் வீடு புகுந்து திருடியது மற்றும் செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட உச்சிப்புளி அருகே உள்ள இருமேனி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் சூர்யா (வயது23) மற்றும் எம்.பி.கே.வலசை கிராமத்தை சேர்ந்த சண்முகராஜ் மகன் யுவஸ்ரீதர் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
கைது
இதுதவிர, எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோவில் மேலத்தெருவை நாகராஜன் (33) என்பவருக்கு சொந்தமான சுமார் 21 கிலோ பட்டுநூலை திருடிய பத்திரகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தெய்வேந்திரன் மகன் லோகநாதன் (38), பெருந்தேவி நகர் குப்புசாமி மகன் கண்ணன் (49) ஆகியோரை போலீசார் கைது செய்து பட்டுநூலை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை திறமையாக துப்பு துலக்கி கைது செய்து அவர்களிடம் இருந்து 54 பவுன் நகை மற்றும் பட்டுநூலை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள் குகனேஸ்வரன், முருகநாதன், சரவணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பாராட்டினார்.
Related Tags :
Next Story