கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து பெய்த மழையால் மணிமுக்தா அணையின் நீர்மட்டம் 32 அடியாக உயர்வு


கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து பெய்த மழையால் மணிமுக்தா அணையின் நீர்மட்டம் 32 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 6 Dec 2020 10:53 AM IST (Updated: 6 Dec 2020 10:53 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து பெய்த மழையால் மணிமுக்தா அணையின் நீர்மட்டம் 32 அடியாக உயர்ந்ததை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கல்வராயன்மலை பகுதியில் பெய்யும் மழைநீர் வழிந்தோடி மணிஆறு மற்றும் முக்தா ஆற்றின் வழியாக பாய்ந்தோடி கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையை வந்தடையும். அந்த வகையில் வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கல்வராயன் மலைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம் இரு ஆறுகளின் வழியாக அணையை வந்தடைந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

மணிமுக்தா அணையின் மொத்த கொள்ளளவு 36 அடியாகும். கடந்த 1-ந்தேதி வரை அணையின் நீர்மட்டம் 26 அடியாக இருந்தது. இந்த நிலையில் புரெவி புயல் காரணமாக கடந்த 2-ந் தேதி முதல் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 32.5 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் 6.5 அடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் மகிழ்ச்சி

தற்போது அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஒரு சில நாட்களில் அணை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 36 அடியாக இருந்தாலும் பாதுகாப்பு கருதி 34 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட மாட்டாது. இதற்கு மேல் வரும் தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படும். இந்த அணையின் மூலம் சூளாங்குறிச்சி, அகரக்கோட்டாலம், அணைக்கரை கோட்டாலம், வாணியந்தல், தண்டலை, பெருவங்கூர், வீ.பாளையம், வீரசோழபுரம், மாடூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். மணிமுக்தா அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story