ஆண்டியப்பனூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது - அமைச்சர், கலெக்டர் மலர் தூவினர்
ஆண்டியப்பனூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. அதில், அமைச்சர் மற்றும் கலெக்டர் மலர் தூவினர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் அணை உள்ளது. வடகிழக்குப் பருவமழையால் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. நேற்று அதிகாலை அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. ஆண்டியப்பனூர் அணை நிரம்பிய தகவல் அறிந்ததும் அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் விரைந்து வந்து, அணையை நேரில் பார்வையிட்டு மலர் தூவினர். அணையில் நடந்து வரும் சுற்றுலா வளர்ச்சிப்பணிகள், படகு இல்லம் அமைக்கப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் சிவன்அருள் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆண்டியப்பனூர் அணை திருப்பத்தூர் ஜவ்வாதுமலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகும் பெரியாறு மற்றும் கொட்டாறு ஆகிய இரு ஆறுகளையும் இணைத்து ஆண்டியப்பனூர் கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டியப்பனூர் அணைக்கட்டும் பணி 1997-ம் ஆண்டு தொடங்கி 2007-ம் ஆண்டு முடிந்தது. அணைக்கு வரும் தண்ணீர் குரிசிலாப்பட்டு அணைக்கட்டு அருகில் பாம்பாற்றில் ஓடி இணைந்து, பின்னர் பெண்ணையாற்றில் கலக்கிறது.
இந்த நீர்த்தேக்கத்தின் நீர்வடி நிலப்பகுதியான 20, 39 சதுர மைல் பரப்பளவு முழுவதும் ஜவ்வாது மலைச்சரிவுகளாகும். நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பு 216.5 ஏக்கர். அணை நிரம்பியதால் குரிசிலாப்பட்டு அணைக்கட்டு வழியாக நீர் வரத்துக் கால்வாய் மூலம் 14 ஏரிகளுக்கு நீர்நிரப்பப்பட்டு 2,055 ஏக்கர் பாசனம் செய்ய உறுதி செய்யப்பட்டுள்ளது. கால்வாய்கள் மூலம் நேரடியாக 2,970 ஏக்கர் புன்செய் நிலமும், ஏரிகளின் மூலமாக 2,055 ஏக்கர் நன்செய் நிலமும் மொத்தம் 5,025 ஏக்கர் நிலம் இத்திட்டத்தின் மூலம் பாசன வசதி பெறும்.
விவசாயிகளின் கோரிக்கையான பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதாகும். இக்கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு, தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நீர்வள ஆதாரம் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் திருப்பதி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சிவாஜி, கூட்டுறவு சங்க தலைவர் கே.எம். சுப்பிரமணியன், ஆறுமுகம் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி, நாகேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், வெள்ளையன், தாசில்தார் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமேதகம், சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story