பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி: வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார் - வாகன சோதனைகள் தீவிரம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லைப்பகுதியில் தீவிர வாகன சோதனையும் செய்யப்படுகிறது.
வேலூர்,
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக விமானநிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய கோவில்கள், வணிகவளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெளி மாவட்டங்கள், பிறமாநிலங்களில் இருந்து வாகனங்களை மாநில மற்றும் மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பத்தரப்பள்ளி, பிள்ளையார்குப்பம், கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே, மாதனூர் அருகே ஆகிய பகுதிகளில் நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர், ஸ்ரீபுரம் தங்ககோவில், விரிஞ்சிபுரம் மார்கப்பந்தீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் பொருட்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது. மேலும் இந்த கோவில்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கோட்டை நுழைவு வாயில் முன்பு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கொண்டும், மோப்ப நாய் மூலமும் சோதனை செய்யப்பட்டு, அதன்பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பணியில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். மாநில, மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் உஷார்நிலையில் இருக்கவும், மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) காலை வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story