ரூ.15 கோடி செல்போன் கொள்ளை: மத்தியபிரதேசத்தில் கைதான 6 கொள்ளையர்கள் கோர்ட்டில் ஆஜர்
சூளகிரி அருகே ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளையில் மத்தியபிரதேசத்தில் கைதான 6 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓசூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று மராட்டிய மாநிலம் மும்பைக்கு புறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி பின்னால் மற்றொரு லாரியில் வந்த மர்ம நபர்கள் கன்டெய்னர் லாரி டிரைவர்களை தாக்கி விட்டு செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக, மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த பரத்தேஜ்வாணி (வயது 37) மற்றும் அமிதாப் பாத்தாதா ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் ஓடு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரா சவுகான் (45), அதே பகுதியை சேர்ந்த பவானி சிங் (47), ரோடுடேரா பகுதியை சேர்ந்த கமல்சிங் (50), இந்தூரை சேர்ந்த அமீர்கான் (39), பரத் அஸ்வானி (32) மற்றும் ஹேமராஜ் (26) ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொள்ளையர்களிடம் இருந்து 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மத்தியபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 6 கொள்ளையர்களையும் தனிப்படை போலீசார் சூளகிரிக்கு நேற்று அழைத்து சென்றனர். அவர்களை ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். பிறகு ஓசூர் கோர்ட்டில் அவர்களை ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். செல்போன் கொள்ளை வழக்கில் இதுவரை 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் 2 பேரிடம் மத்தியபிரதேச மாநிலத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story