வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க.வினர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் - நாமக்கல், திருச்செங்கோட்டில் நடந்தது
நாமக்கல், திருச்செங்கோட்டில் நேற்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க.வினர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாமக்கல்,
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். தி.மு.க. துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் வரவேற்று பேசினார்.
இதில் முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன், கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராமசுவாமி, பொன்னுசாமி, சரஸ்வதி, மாவட்ட துணை செயலாளர் விமலா சிவக்குமார், தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் கவுரவ செயலாளர் அய்யாவு, நகர பொறுப்பாளர்கள் பூபதி, சிவக்குமார் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தி.மு.க. மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு கொடியுடன் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி டெல்லி விவசாயிகளோடு சேர்ந்து போராட்டம் செய்வதற்கு, தமிழக விவசாயிகள் டெல்லிக்கு செல்வதற்கு தயாராக இருக்கிறார்கள். எனவே மத்திய அரசு கால தாமதம் செய்யாமல் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பபெற வேண்டும். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கிடைக்க ஏதுவாக திருத்தம் செய்ய வேண்டும்.
வேளாண் சட்டத்தை பொறுத்த வரையில் மத்திய அரசுக்கு ஆதரவாக பா.ஜனதா தலைவர்கள் சொல்லாததை கூட முதல்-அமைச்சர் பேசி வருகிறார். மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வரும் முதல்-அமைச்சரின் நிலைபாடு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அது வருகிற தேர்தலில் எதிரொலிக்கும்.
இட ஒதுக்கீடு கேட்டு போராடுவது அந்தந்த சமுதாயத்தின் உரிமை. ஒரே பட்டியலில் உள்ள ஒரு சமூகத்தினருக்கு அதிகப்படியான இட ஒதுக்கீடு வழங்கினால் மற்ற சமூகத்தினர் அனாதையாக்கப்படுவார்கள். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் ஒரே வார்த்தை தான் சொல்வோம். ஆனால் மற்றவர்கள் இருவேறு கருத்துகளை பேசி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். நகர பொறுப்புக்குழு தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். நாமக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பார்இளங்கோ, முன்னாள் நகர செயலாளர் நடேசன், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட அவைத் தலைவர் நடனசபாபதி, பொதுக்குழு உறுப்பினர் யுவராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் பரமானந்தம், விவசாய அணி அமைப்பாளர் மொளசி ராஜமாணிக்கம், எலச்சிப்பாளையம் தங்கவேல், செல்வராஜ், மாவட்ட இளைஞரணி மதுரா செந்தில், மாணவரணி ஜிஜேந்திரன், மகளிரணி பூங்கோதை செல்லதுரை, வர்த்தக அணி கிரிசங்கர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story