தேனியில், விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்-ஊர்வலம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேனியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நடந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தேனி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், மத்திய-மாநில அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று கருப்புக்கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி, தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், தேனி பங்களாமேட்டில் நடந்தது. இதற்காக தி.மு.க.வினர் நேரு சிலை சிக்னல் பகுதியில் திரண்டனர். அங்கிருந்து ஏராளமானோர் ஊர்வலமாக பங்களாமேடு பகுதிக்கு வந்தனர். பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல்.மூக்கையா, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் நாகரத்தினம், சுருளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இதில், தேனி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, தி.மு.க. தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன், போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், தி.மு.க. நிர்வாகி கே.எஸ்.ஆர்.சரவணக்குமார் மற்றும் ம.தி.மு.க., திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தால் தேனியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உத்தமபாளையம் பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் அணைப்பட்டி முருகேசன், கம்பம் நகர செயலாளர் வக்கீல் துரை நெப்போலியன், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story