கொட்டித்தீர்த்த கனமழை எதிரொலி: கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு; போக்குவரத்து துண்டிப்பு
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை எதிரொலியாக, மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் 300 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானல் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழையினால் கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் கோம்பைக்காடு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்காக விழுந்தன. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் செந்தில் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண்சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மலைப்பாதையில் விழுந்து கிடந்த கற்கள், மணல் குவியல் அகற்றப்பட்டன. சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. இதனையடுத்து பகல் 12 மணி முதல் அப்பகுதியில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
இதேபோல் பலத்த மழை காரணமாக, வில்பட்டி ஊராட்சியை சேர்ந்த வாழைகாட்டு ஓடை பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தற்போது ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பாலத்தின் ஒரு பகுதி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பாலத்தின் மறுபுறத்தில் வசிக்கிற 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.
ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு அவர்கள் வந்தனர். மேலும் வில்பட்டி செல்லும் மலைப்பாதையில் சாமியார் பங்களா என்ற இடத்தின் அருகே மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக மண்சரிவினை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதேபோல் வாழைகிரி என்ற இடத்தில், மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி அருகே உள்ள பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர் மழை காரணமாக கொடைக்கானல் பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக கொடைக்கானல் நகரின் குடிநீர் ஆதாரமாக திகழும் 36 அடி உயரம் கொண்ட புதிய அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து நீர்மட்டம் 25 அடியானது. மேலும் கொடைக்கானல் பகுதியில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இருந்து உபரி நீர் அதிக அளவு வெளியேறி கொண்டிருக்கிறது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி அப்சர்வேட்டரியில் 39 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதற்கிடையே நேற்று காலையில் இருந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
இதேபோல் வடகாடு, பாச்சலூர், வண்டிப்பாதை, பால்கடை, பாச்சலூர், கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. அதன்படி நேற்று காலை 11 மணி அளவில் வடகாடு-பாச்சலூர் மலைப்பாதையில் தட்டைகுழிகாடு என்ற இடத்தில் மண்சரிவு காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் பாறாங்கற்களும் உருண்டு சாலையில் விழுந்தன.
இதனால் வடகாடு-பாச்சலூர் மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் ஜெயபாலன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சாய்ந்து விழுந்த மரங்களையும், பாறாங்கற்களையும் அகற்றினர்.
பெரும்பாறை அருகே உள்ள கல்லக்கிணறு மலைக்கிராமத்துக்கு செல்லும் பாதையின் குறுக்காக கல்லக்கிணறு ஆறு ஓடுகிறது. மழைக்காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல மிகவும் அவதிப்படுவார்கள். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் கல்லக்கிணறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஆற்றை கடக்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பின்னர் ஆற்றின் குறுக்காக கயிறு கட்டி பொதுமக்கள் ஆற்றை கடந்து சென்றனர்.
Related Tags :
Next Story