வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2020 6:30 PM IST (Updated: 6 Dec 2020 6:26 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையொட்டி மணிக் கூண்டு அருகே ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். இதையடுத்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் 3 டிராக்டர்களில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., வேலுச்சாமி எம்.பி. ஆகியோர் டிராக்டர்களை ஓட்டி வந்தனர்.

இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் பெரும்பாலானோர் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றனர். அப்போது வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இந்த சமயத்தில் ஒரு பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி பேசுகையில், வேளாண் திருத்த சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் டெல்லியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். மத்திய அரசை எதிர்த்து கேட்க இயலாமல், அ.தி.மு.க. அரசு அந்த சட்டங்களை ஆதரிக்கிறது. இதற்கிடையே விவசாயத்துக்கான இலவச மின்சாரமும் ரத்தாகும். மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து செயல்படுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. அரசை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் ஒன்றாக பாடுபட வேண்டும், என்றார்.

Next Story