திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்


திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2020 6:45 PM IST (Updated: 6 Dec 2020 6:51 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள என்.புதுப்பட்டியில் காட்டு நாயக்கர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு, திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து கடந்த மாதம் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது விண்ணப்பித்த 54 பேருக்கும் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கும்படி வலியுறுத்தப்பட்டது. ஒருசில நாட்களில் சான்றிதழ் வழங்குவதாக அதிகாரிகள் உறுதிஅளித்தனர். ஆனால், சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பள்ளி மாணவர்கள் தங்களுடைய பெற்றோர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், மலைவாழ் மக்கள் சங்கத்தினருடன் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேற்று வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 54 பேருக்கும் சாதி சான்றிதழ் வழங்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் வந்து, அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உடனடியாக 15 பேருக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. புயல் நிவாரண பணிகள் நடப்பதால், விரைவில் மீதமுள்ள நபர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story