கன்னட அமைப்புகள் போராட்டம்: நீலகிரி-கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம் - பொதுமக்கள், டிரைவர்கள் கடும் அவதி
கன்னட அமைப்புகள் போராட்டம் காரணமாக நீலகிரி-கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள், டிரைவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
கூடலூர்,
கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் நீலகிரி மாவட்டம் அமைந்து உள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு அரசு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு அரசு பஸ் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கர்நாடகாவிற்கு சென்று வருகின்றனர். இதனால் நீலகிரி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னட அமைப்புகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் பாதுகாப்பு கருதி தமிழகத்தில் இருந்து அரசு பஸ் உள்பட வாகனங்களை இயக்க வேண்டாம் என்று அந்த மாநில போலீசார் கேட்டுக்கொண்டனர். அதன்படி கூடலூரில் இருந்து கர்நாடகாவிற்கு அரசு பஸ்கள் உள்பட வாகனங்கள் இயக்கப்படவில்லை.
மேலும் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவிற்கு செல்ல வந்த சரக்கு லாரிகளை கக்கநல்லாவில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தவிர கன்னட அமைப்பினரின் போராட்டத்தை அறியாமல் கர்நாடகாவிற்கு செல்ல வாகனங்களில் வந்தவர்கள் தொரப்பள்ளியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் முதுமலை புலிகள் காப்பக சாலைகளில் ஏராளமான சரக்கு லாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், அங்கு வாகனங்களை நிறுத்த வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் வாகனங்களில் வந்த பொதுமக்கள், சரக்கு லாரி டிரைவர்கள் கடும் அவதியடைந்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கன்னட அமைப்பினரின் போராட்டத்தை தொடர்ந்து தமிழக, கேரள பதிவு எண் கொண்ட வாகனங்களை கர்நாடகாவுக்கு அனுமதிக்க வேண்டாம் என அந்த மாநில போலீசார் கேட்டுக்கொண்டனர்.
இதனால் தமிழக-கர்நாடக எல்லையில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளிடம் இருந்து மறு உத்தரவு வந்த பின்னரே கர்நாடகாவுக்கு வாகனங்களை அனுமதிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனிடையே மாலை 6 மணிக்கு பிறகு கர்நாடகாவுக்கு மற்ற வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story