புதுடெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்பு
புதுடெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஈரோடு,
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். விவசாயிகளுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த மக்களுக்கும் உணவு தொடர்பான பாதிப்பை இந்த சட்டங்கள் ஏற்படுத்தும், எனவே 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் லட்சக்கணக்கானவர்கள் புது டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு தெற்கு மற்றும் ஈரோடு வடக்கு மாவட்டங்கள் சார்பில் ஈரோடு பூந்துறை ரோடு ஆனைக்கல்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோஷம் எழுப்பப்பட்டது. பிரமாண்ட பொதுக்கூட்டம் போன்று நடந்த இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ரா.ஈஸ்வரமூர்த்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கி.வே.பொன்னையன், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரத்தினசாமி, சக்தி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் பா.அ.சென்னியப்பன், தென்னிந்திய நதிநீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஏ.ராமசாமி, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கி.வடிவேல், இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அறச்சலூர் செல்வம், உழவர் விவாதக்குழு சார்பில் எஸ்.ஏ.பெருமாள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
தி.மு.க. நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி (முன்னாள் எம்.பி.), கொள்கை பரப்பு துணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோரும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி கூறுகையில், ‘விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் நகரப்பகுதியில் ஒரு வீதியை அடைத்துக்கொண்டு நடக்காமல், விவசாய நிலங்களுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி நடத்தப்படுகிறது. விரைவில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவார். அவர் ஆட்சிக்கு வந்த நாள் முதல் பொதுமக்களுக்கு செய்யவேண்டிய நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். கொரானா காலத்தில் ஆளும் கட்சியினரும் ஆட்சியில் இருப்பவர்களும் முடங்கிக்கிடந்தபோது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து மக்களுக்கும் உதவ வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் 4 தொகுதிகளில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக ரூ.4 கோடியே 67 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஸ், துணை செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், செல்லப்பொன்னி மனோகரன், சின்னையன், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கே.இ.பிரகாஷ், கோட்டை பகுதி செயலாளர் பொ.ராமச்சந்திரன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஈ.ஆர்.சிவக்குமார், கோபி ஒன்றிய செயலாளர் எஸ்.ஏ.முருகன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story