தொடர் மழையால் மாமல்லபுரம் புலிக்குகையை மழைநீர் சூழ்ந்தது
தொடர் மழையால் மாமல்லபுரம் புலிக்குகை புராதன சின்னம் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
புலிக்குகை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புலிக்குகை புராதன சின்னம் பல்லவ மன்னர்களால் 7-ம் நூற்றாண்டில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட முக்கிய பாரம்பரிய நினைவு சின்னமாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும். முழுக்க, முழுக்க பல்லவர்கள் புலிகளின் தலைகளை சிற்பங்களாக வடித்து இங்குள்ள பாறையில் அழகுற வடிவமைத்துள்ளனர். இதனை உருவாக்கும்போது புலிக்குகை முகப்பு பகுதியில் 3 அடி ஆழத்தில் படிகள் அமைத்து அகழியை உருவாக்கி உள்ளனர்.
மாமல்லபுரம் தொல்லியல் துறை இவற்றை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
மழைநீர் தேக்கம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் புலிக்குகையில் உள்ள முன் பக்க அகழியில் 3 அடி ஆழத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. முன் பக்க அகழி பகுதி முழுவதும் நீரில் மூழ்கிய நிலையில் ஒரு குளத்தில் உள்ள புராதன சின்னம் போல் புலிக்குகை ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ள புலிக்குகை விரைவில் திறப்பதற்காக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்காக மாமல்லபுரம் தொல்லியல் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
மாவட்ட கலெக்டரின் அனுமதி கிடைத்தவுடன் புலிக்குகை உள்ளிட்ட மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து புராதன சின்னங்களும் திறக்கப்பட உள்ளதாக தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Related Tags :
Next Story