நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 7 Dec 2020 4:41 AM IST (Updated: 7 Dec 2020 4:41 AM IST)
t-max-icont-min-icon

நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரியலூர், 

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அரியலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அனிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சங்கர், நகர செயலாளர் செந்தில் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் அக்கட்சியினர் நான்கு ரோட்டில் இருந்து கடைவீதி வழியாக பா.ஜ.க. கொடியேந்தி ஊர்வலமாக சென்று திருச்சி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக உள்ள அம்பேத்கர் சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் கதிர்வளவன் பேசினார். முன்னதாக மாநில அமைப்பாளர் ரத்தினசிவா வரவேற்றார். ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டத்தில் தொகுதி செயலாளர் இலக்கியதாசன் தலைமையில் திருச்சி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில செயலாளர் சி.பி.ராஜா மாலை அணிவித்தார். முடிவில் நகர செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

பா.ம.க. சார்பில் மாநில துணை பொது செயலாளர் திருமாவளவன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திருச்சி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் மாதவன்தேவா நன்றி கூறினார்.

ஆண்டிமடம், திருமானூர்

ஆண்டிமடம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்திலிங்கம் தலைமையில் மாவட்ட பா.ம.க. துணை செயலாளர் ராசு, மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பா.ம.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ராமநாதன் தலைமையில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு, பா.ம.க. நகர செயலாளர் வீரப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆண்டிமடம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், ராசாப்பிள்ளை ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருமானூர் பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன் தலைமையிலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாலாஜி தேவேந்திரன் ஆகியோர் தலைமையில், அந்தந்த கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் காமராசு, லோக் ஜனசக்தி கட்சி சார்பில் மாநில விவசாய அணி தலைவர் சீனிவாசன், புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் வெள்ளையன் ஆகியோர் தலைமையில், அந்தந்த கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், இளைஞர்கள், பொதுமக்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story