மாற்றுத்திறனாளி போல நடித்து வீடுகளில் திருடிய பெண் கைது ரூ.27 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்


மாற்றுத்திறனாளி போல நடித்து வீடுகளில் திருடிய பெண் கைது ரூ.27 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Dec 2020 4:57 AM IST (Updated: 7 Dec 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மாற்றுத்திறனாளி போல நடித்து வீடுகளில் திருடி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.27 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு, 

பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகஅளவில் அரங்கேறி வந்தது. அப்பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவை உடைத்தும், கள்ளச்சாவியை பயன்படுத்தியும் நகை, பணம், பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். இந்த சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தலகட்டபுரா போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் வீடுகளில் திருடி வந்த பெண்ணை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் ராமமூர்த்திநகரை சேர்ந்த மஞ்சுஸ்ரீ (வயது 45) என்று தெரியவந்தது. மேலும் அவர், மாற்றுத்திறனாளி போல நடித்து வீடுகளில் திருடுவதை தொழிலாக வைத்திருந்ததும் தெரிந்தது. பெங்களூருவில் பூட்டி கிடக்கும் வீடுகளை காரில் சென்று மஞ்சுஸ்ரீ நோட்டமிடுவார். பின்னர் அந்த வீடுகளின் கதவை கள்ளச்சாவி பயன்படுத்தி திறந்து உள்ளே புகுந்து நகை, பணத்தை அவர் திருடி வந்துள்ளார்.

இவ்வாறு வீடுகளில் திருட செல்லும் போதும், திருடிவிட்டு வரும் போது மாற்றுத்திறனாளி போல மாறிவிடுவார். இதனால் மஞ்சுஸ்ரீ மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்துள்ளது. அவரிடம் இருந்து பல்வேறு வீடுகளில் திருடிய தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.27 லட்சம் ஆகும்.

மஞ்சுஸ்ரீ கைதாகி இருப்பதன் மூலம் தலகட்டபுரா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 18 திருட்டு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான மஞ்சுஸ்ரீ மீது தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story